2-வது டெஸ்ட்: இங்கிலாந்து ’வேகத்’தில் சரிந்தது பாக்.!
பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்தது. இதில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி, 174 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக சதாப் கான் 56 ரன்கள் எடுத்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, 363 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜோஸ் பட்லர் 80 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். குக் 46, கேப்டன் ரூட் 45, பெஸ் 49 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் பஹீம் அஷ்ரப் 3 விக்கெட்டுகளையும் முகமது ஆமீர், முகமது அப்பாஸ், ஹசன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 189 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தின் துல்லியமான வேக பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 46 ஓவர்களில் 134 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் இமாம் -உல்–ஹக் 34 ரன்களும், உஸ்மான் சலாஹூதின் 33 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், டோமினிக் பெஸ் தலா 3 விக்கெட்டுக ளையும் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 80 ரன் எடுத்த இங்கிலாந்து வீரர் பட்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமன் செய்தது.