‘இந்திய கிரிக்கெட் வீரர்’ என்ற பயோவை ட்விட்டரிலிருந்து நீக்கினாரா ரோகித்? அதிர்ச்சி தகவல்
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ‘ஹிட்மேன்’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா.
தற்போது அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். காயம் காரணமாக கடந்த இரண்டு ஆட்டங்களில் ரோகித் விளையாடாமல் இருந்தார். அதேபோல், இந்த சீசனிலும் அவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஒரு சில போட்டிகளில் மட்டுமே அதிரடி காட்டினார். மற்ற போட்டிகளில் சொற்பமான ரன்களில் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் நேற்று பிசிசிஐ ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை அறிவித்தது. அதில் எந்தவிதமான கிரிக்கெட் பார்மேட்டிலும் ரோகித் ஷர்மாவின் பெயர் இடம் பிடிக்காமல் இருந்தது.
மாறாக பிசிசிஐயின் மருத்துவ குழு தொடர்ந்து ரோகித்தையும், இஷாந்த் ஷர்மாவையும் கண்காணிக்கும் என சொல்லியிருந்தது.
‘ரோகித் ஏன் அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை’ என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் ரோகித் ஷர்மா ட்விட்டரில் ‘இந்திய கிரிக்கெட் வீரர்’ என இருந்த பயோவை நீக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அது குறித்த படங்களும் தற்போது பகிரப்பட்டு வருகின்றன.
அதன் உண்மை தன்மையை ஆராய்ந்ததில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே ரோகித் ஷர்மாவின் புரொபைலில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என தெரியவந்துள்ளது. இந்திய அணியின் நீல நிற ஜெர்சியில் பேட்டை தூக்கி பிடித்திருக்கும் போட்டோ தான் ரோகித்தின் கவர் போட்டோவாக உள்ளது.
இதனையடுத்து அது வெறும் வதந்தி தான் என்பது இப்போதைக்கு நிரூபணமாகியுள்ளது.