"என்ன வேண்டுமோ தருகிறேன்; ஆனால் அது மட்டும் வேண்டாம்" - தோனியின் கெஞ்சல் !
உங்களுக்கு வாழ்க்கையில் என்ன வேண்டுமோ தருகிறேன்.ஆனால் அந்த மங்கூஸ் பேட்டை மட்டும் பயன்படுத்தாதீர்கள் என்று தோனி தன்னிடம் கெஞ்சியதாக முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேடன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹேடன் அதிரடி ஆட்டத்திற்குச் சொந்தக்காரர். அவர் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். அப்போது அவர் மங்கூஸ் என்ற சிறிய பேட்டை பயன்படுத்தி அதிரடி காட்டினார். ஹேடன் பயன்படுத்திய அந்த பேட் எதிர் அணியினருக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தது. அந்த பேட் குறித்தும் தோனி குறித்தும் சிஎஸ்கே அணியின் நேரலை நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது பேசிய ஹேடன் "தோனி என்னிடம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் கேளுங்கள் நான் தருகிறேன். இந்த பேட்டை மட்டும் பயன்படுத்த வேண்டாம். தயவு செய்து இந்த பேட்டை பயன்படுத்தாதீர்கள் என்று வற்புறுத்தினார். அதற்கு நான், ’இந்த வகை பேட்டில் நான் ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டு இருக்கிறேன். அது மட்டுமின்றி பேட்டின் நடுப்பகுதியில் பந்து பட்டால் 20 மீட்டர் தூரம் கூடுதலாகப் பறக்கும். அதனால் கவலைப்படாதீர்கள்’ என்று தோனியிடம் கூறி அவரை ரிலாக்ஸ் செய்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு மங்கூஸ் பேட்டுடன் களம் கண்ட மேத்யூ ஹேடன் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 43 பந்துகளில் 9 பவுண்டரி, 7 சிக்சருடன் 93 ரன்கள் விளாசினார். மேலும் அந்த ஆண்டுதான் முதல்முறையாக சிஎஸ்கே அணியின் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.