“போர் துன்பங்களை கடந்துவந்தவன் நான்”-பெடரரின் அசாத்திய ரெக்கார்டை முறியடித்த ஜோகோவிச் எமோஷனல் பேச்சு

நியூயார்க்கில் நடைபெற்று வரும் யுஎஸ் ஓபன் 2023 கிராண்ட்ஸ்லாம் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார் செர்பிய வீரரான நோவக் ஜோகோவிச்.
N Djokovic - B Shelton
N Djokovic - B Sheltonweb

நடப்பு ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியானது, தரவரிசையில் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச்சுக்கும், 9ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ்க்கும் இடையே ஆர்தர் ஆஷே ஸ்டேடியத்தில் செவ்வாய் கிழமை மதியம் நடைபெற்றது.

பெடரர் சாதனையை முறியடித்து 47வது முறை அரையிறுதிக்கு முன்னேற்றம்!

23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், 3 முறை யுஎஸ் ஓபன் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச்சுக்கு டெய்லர் ஃபிரிட்ஸை வீழ்த்துவது அவ்வளவு கடினமானதாக இருக்கவில்லை. என்னதான் சொந்த மண்ணின் வீரரான டெய்லர் ஃபிரிட்ஸ்க்கு ஆதரவு அதிகமாக இருந்தாலும் தன்னுடைய அபாரமான ஆட்டத்தால் முதல் செட்டையே டாமினேட் செய்து வெற்றிபெற்றார் ஜோகோவிச். பின்னர் அடுத்தடுத்த செட்களில் கம்பேக் கொடுத்த டெய்லர் ஃபிரிட்ஸ், ஜோகோவிச்சின் வெற்றியை கடினமாக்கினார். 4-4 என அடுத்தடுத்த புள்ளிகளை பெற்று ஃபிரிட்ஸ் டஃப் கொடுக்க ஜோகோவிச் வெற்றிபெற மெனக்கிட வேண்டியிருந்தது.

N Djokovic
N Djokovic

பின்னர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-4, 6-4 என்று அடுத்தடுத்த இரண்டு செட்களை கைப்பற்றி தன்னுடைய 4வது யுஎஸ் பட்டத்திற்காக அரையிறுதியில் காலடி வைத்தார். நடப்பு கிராண்ட்ஸ்லாம் காலிறுதியில் டெய்லர் ஃபிரிட்ஸை வீழ்த்திய ஜோகோவிச், அதிகமுறை கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறிய ரோஜர் பெடரரின் சாதனையை முறியடித்தார்.

46முறை கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறியிருந்த பெடரர் அனைத்து காலத்திற்குமான சாதனையை படைத்திருந்தார். இந்நிலையில் 47வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் ஜோகோவிச், ரோஜர் பெடரரின் முறியடிக்கவே முடியாத ஒரு சாதனையை முறியடித்து புதிய ரெக்கார்டை படைத்துள்ளார். அந்த சாதனை பட்டியலில் 47 முறை ஜோகோவிச்சும், 46 முறை பெடரரும், 38 முறை நடாலும் இருக்கின்றனர்.

போரால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து துன்பங்களை கடந்து வந்தவன் நான்!

கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வாரிக்குவித்திருக்கும் ஜோகோவிச் தன்னுடைய சாதனை புத்தகத்தில் மற்றொரு மகுடமான சாதனையை ஏற்றிவைத்ததற்கு பிறகு நெகிழ்ச்சியோடு பேசினார். அப்போது பேசுகையில், “எனது வாழ்க்கையில் எனக்கு அனைத்தும் கொடுத்த விளையாட்டு இது தான். நான் வளரும்போது போரால் பாதிக்கப்பட்ட நாடான செர்பியாவில் இருந்து வந்தேன். நான் வளர்ந்து வரும் போது நிறைய துன்பங்களை எதிர்கொண்டேன். அனைத்தையும் கடந்து வந்து ஒரு ஷாட்டை ஆடுவதற்கு நான் நிறைய தாங்க வேண்டியிருந்தது. பயணம் எவ்வளவு தூரம் இருந்தாலும் கடந்து வந்து சர்வதேச விளையாட்டை விளையாடுங்கள்” என்று எமோஷ்னலாக பேசினார்.

N Djokovic
N Djokovic

மேலும் “எனக்கு கிடைத்த அனைத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். எனது வாழ்க்கையின் தொடக்க கட்டம் முதல் தற்போது வரை ஒவ்வொரு முறையும் நான் கோர்ட்டுக்கு வருவதை பெரிய வாய்ப்பாக பார்க்கிறேன். எனக்கு இன்னும் எத்தனை வாய்ப்புகள் கிடைக்கும் என்று எனக்குத் தெரியவில்லை, அதனால் என்னால் முடிந்தவரை அதை அனுபவிக்க முயற்சிக்கிறேன்” என்று பேசினார்.

B Shelton
B Shelton

மதிய நேரத்தில் 90 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலையில் வேர்வையோடு மக்களை மகிழ்வித்த ஜோகோவிச், அரையிறுதிப்போட்டியில் மற்றொரு அமெரிக்க வீரரான பென் ஷெல்டனை வரும் 9ஆம் தேதி எதிர்கொள்ளவிருக்கிறார். இரண்டாவது ஒற்றையர் ஆடவர் காலியிறுதிப்போட்டியில் பிரான்ஸ் டியாஃபோவை வீழ்த்திய பென் ஷெல்டன் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். 20 வயதேயான இந்த வீரர் தன்னுடைய முதல் கிராண்ட்ஸ்லாமிற்காக காத்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com