மாவட்ட அளவிலான மகளிர் கிரிக்கெட் - 35 வீராங்கனைகளுக்கு பயிற்சியளிக்க முடிவு

மாவட்ட அளவிலான மகளிர் கிரிக்கெட் - 35 வீராங்கனைகளுக்கு பயிற்சியளிக்க முடிவு
மாவட்ட அளவிலான மகளிர் கிரிக்கெட் - 35 வீராங்கனைகளுக்கு பயிற்சியளிக்க முடிவு

மாவட்ட அளவில் நடைபெற்ற மகளிர் கல்லூரிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரில், பாரதிதாசன் பல்கலைக்கழக அணி வெற்றிப்பெற்று கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

திருச்சியில் மாவட்ட மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டியில் பங்குபெற்று தகுதிபெற்ற அண்ணா பல்கலைக்கழக மாணவிகளும், பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவிகளும் இறுதிச்சுற்றில் விளையாடினார்கள். ஃபைனலில் இரண்டாவதாக பேட்டிங் செய்த பாரதிதாசன் பல்கலைக்கழக அணி, 19 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்து வெற்றிபெற்று, கோப்பையை தட்டிச்சென்றது.

மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடர்!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில், இந்திரா காந்தி மகளிர் கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரி, நேரு நினைவு கல்லூரி உள்ளிட்ட 10 கல்லூரிகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர். இதன் தொடக்க விழா தேசிய கல்லூரியில் நடந்தப்பட்டது. அதில் கல்லூரி முதல்வர் குமார், தமிழக மகளிர் கிரிக்கெட் அணி தேர்வு குழு உறுப்பினர் பொற்சிலை ஆகியோர் பங்கேற்று, டி20 போட்டிகளை தொடக்கி வைத்தனர். பின்னர் அணிகள் பிரிக்கப்பட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன.

முதல் அரையிறுதி போட்டி, நேற்று திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டது. அதில் அண்ணா பல்கலைக்கழக மாணவிகளும், ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகளும் விளையாடினார்கள். அதில் முதலில் களமிறங்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவிகள் ஒரு விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருந்தனர். பின்னர் அவர்களை எதிர்த்து களமிறங்கிய ஹோலி கிராஸ் அணியினர், 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தனர்.

இரண்டாவது அரை இறுதிப் போட்டியானது, அதே கிரிக்கெட் மைதானத்தில், பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவிகளுக்கும், நேரு நினைவுக் கல்லூரி மாணவிகளுக்கும் இடையே நடத்தப்பட்டது. அதில் முதலில் களமிறங்கிய பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவிகள் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை குவித்தனர். பின்னர் களமிறங்கிய நேரு நினைவு கல்லூரி மாணவிகள், 7 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றியை பறிகொடுத்தனர்.

இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் அணி!

இந்நிலையில் இறுதிசுற்றுப் போட்டியானது, அண்ணா பல்கலைக்கழக மாணவிகளுக்கும், பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவிகளுக்கும் இடையே இன்று சாரநாதன் பொறியியல் கல்லூரியில் தொடங்கி நடைபெற்றது. முதலில் களமிறங்கிய அண்ணா பல்கலைக்கழக அணியினர், 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்தனர். 105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பாரதிதாசன் பல்கலைக்கழக அணியினர் 19 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்து, கோப்பையை தட்டிச்சென்றனர்.

4 ஓவரில் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய மாணவி!

இறுதிப் போட்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஹரிணி மாரி, 4 ஓவர்கள் பந்து வீசி, 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அபார திறமையை வெளிப்படுத்தினார். அதேபோல பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி பூமதி 30 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

35 வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டு மாநில அளவில் விளையாட கிரிக்கெட் பயிற்சி!

தொடரின் வெற்றியை பெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக அணியினருக்கு, சாரநாதன் பொறியியல் கல்லூரி செயலாளர் ரவீந்திரன், மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சஞ்சய், தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் பொற்சிலை ஆகியோர் பரிசு கோப்பையை வழங்கி பாராட்டினார்கள்.

திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக நடத்தப்பட்ட இப்போட்டிகளின் மூலம், 35 வீராங்கனைகள் அடுத்தகட்ட பயிற்சிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநில அளவில் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி வழங்க, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவுசெய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com