மாதவன் மகனைத் தொடர்ந்து சாதிக்கும் கெளதம் மேனன் மகன் - டிஎன்பிஎல் போட்டியில் அசத்தல்

மாதவன் மகனைத் தொடர்ந்து சாதிக்கும் கெளதம் மேனன் மகன் - டிஎன்பிஎல் போட்டியில் அசத்தல்
மாதவன் மகனைத் தொடர்ந்து சாதிக்கும் கெளதம் மேனன் மகன் - டிஎன்பிஎல் போட்டியில் அசத்தல்

இயக்குநர் கௌதம் மேனனின் மகன் தற்போது நடைபெற்று வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ‘மின்னலே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கௌதம் வாசுதேவ் மேனன், காதல் கதைகள் சொல்வதில் தனக்கென தனி பாணியை கடைப்பிடித்து ரசிகர்களை ஈர்த்துள்ளார். இவரின் இயக்கத்தில் உருவான ‘காக்க காக்க’, வேட்டையாடு விளையாடு’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இவரது 19 வயது மகனான ஆர்யா யோஹன் மேனன், தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். அதில் அவர் பவுலிங் செய்த முதல் பந்திலேயே விக்கெட்டையும் வீழ்த்தி கவனம் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் உள்ள கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தில் டி.என்.பி.எல். (TNPL) நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான டி.என்.பி.எல். தொடர் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் நெல்லை அணியின் வெற்றிக்கு இயக்குநர் கௌதம் மேனனின் மகன் ஆர்யா யோஹன் மேனன் முக்கிய காரணமாக இருந்தார். ஏனெனில் நெல்லை அணிக்கு முதல் விக்கெட் எடுத்து கொடுத்ததே ஆர்யா யோஹன் மேனன் தான்.

இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ஆர்யா யோஹன் பவர்ப்ளேவில் மிகவும் அட்டகாசமாக பந்துவீசினார். பவர் ப்ளேவில் மட்டும் 2 ஓவர்கள் வீசி 15 ரன்களே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார். ஆர்யா யோஹன் லைன் மற்றும் லென்த்தில் மிகவும் அற்புதமாக பந்துவீசி எதிரணிக்கு நெருக்கடி அளித்தார். ஆர்யா யோஹன் மேனன் மொத்தம் 3 ஓவர்கள் வீசி 26 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். மேலும், ஒரு ரன் அவுட்டும் செய்தார். இந்த போட்டியில் நெல்லை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களின் வாரிசுகள், திரையுலகிலேதான் அறிமுகமாவார்கள். ஆனால் நடிகர் மாதவனின் மகன் நீச்சல் போட்டிகளில் சர்வதேச அளவில் பதக்கங்களை குவித்து வருகிறார். அதேபோல், தற்போது மாதவன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான கௌதம் மேனனின் மகனும் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கியுள்ளது சினிமா ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com