"7-ஆம் நம்பர் ஜெர்சிக்கும் ஓய்வளித்துவிடுங்கள்"-பிசிசிஐக்கு தினேஷ் கார்த்திக் வேண்டுகோள் !
தோனியை கவுரவிக்கும் விதமாக அவர் அணிந்திருந்த 7 ஆம் நம்பர் ஜெர்சிக்கும் ஓய்வளித்து விடுங்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நேற்று சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். அவரது ஓய்வு முடிவுக்கு கிரிக்கெட் வீரர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் தோனிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். மேலும் அதில் இருவரும் இருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
அதில் "இதுதான் நான் தோனியுடன் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம். இந்தப் புகைப்படம் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பின்பு எடுக்கப்பட்டது. தோனியுடன் மிக அருமையான நினைவுகள் என்னிடம் அப்படியே இருக்கிறது. தோனியை கவுரவிக்கும்விதமாக 7 ஆம் நம்பர் ஜெர்சிக்கும் பிசிசிஐ ஓய்வுக் கொடுத்துவிட வேண்டும். உங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸ்க்கு என் வாழ்த்துகள், நிறைய ஆச்சரியங்கள் அந்த வாழ்க்கையிலும் காத்திருக்கிறது" என தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளார்.