ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழந்ததைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் விலகினார். இதைத்தொடர்ந்து டெஸ்ட் அணிக்கு சன்டிமாலும், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி அணிக்கு உபுல் தரங்காவும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாக 25 வயதான ஏஞ்சலோ மேத்யூஸ் 2013 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தார். அவரது தலைமையில் இலங்கை அணி 34 டெஸ்ட் போட்டியிலும், 98 ஒருநாள் போட்டியிலும், 12 இருபது ஓவர் போட்டியிலும் விளையாடி இருக்கிறது. சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இலங்கை அணி 2–3 என்ற கணக்கில் இழந்தது. தர வரிசையில் 11வது இடத்தில் உள்ள ஜிம்பாப்வே அணியிடம் முதல்முறையாக தொடரை பறிகொடுத்ததால் இலங்கை அணி கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். மேலும் 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இருந்தே இலங்கை அணி ஏற்றத்தை விட இறக்கத்தையே அதிகம் சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் ராஜினாமா கடிதம் கொடுத்து இருந்தார். இதனை இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று முன்தினம் ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டனாக தினேஷ் சன்டிமாலும், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான அணியின் கேப்டனாக உபுல் தரங்காவும் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனை இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.