இந்தியா வந்துள்ள சர்வதேச கால்பந்து ஜாம்பவான் மரடோனா நல நிதி திரட்டும் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடவுள்ளார்.
அர்ஜெண்டினாவை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் மரடோனா கொல்கத்தா வந்துள்ளார். 3 நாட்கள் பயணமாக வந்துள்ள அவரை ரசிகர்கள் விமான நிலையத்தில் டீகோ.டீகோ.என உற்சாக கூக்குரலிட்டு வரவேற்றனர். அப்போது ரசிகர்களை பார்த்து மரடோனா பறக்கும் முத்தங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தப்பயணம் எனக்கு மிகப்பெரிய கவுரவம். கொல்கத்தா மிகவும் சிறப்பு வாய்ந்த இடம். இங்கு உள்ள ரசிகர்கள் அற்புதமானவர்கள். கடந்த கால பயணத்தின் போது எனக்கு நல்ல நினைவுகள் கிடைத்தன என்றார்.
இந்தியா வந்துள்ள மரடோனா புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சை மையத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொள்கிறார். பின்னர் நல நிதி திரட்டும் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு ஆடுகிறார். கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தலைமையிலான அணியுடன் மரடோனாவின் அணி விளையாடுகிறது. 9ஆண்டுகளுக்கு பின் மரடோனா கொல்கத்தாவில் ஆட உள்ளார். இந்தப்போட்டியில் மரடோனா முழுமையாக விளையாடுவாரா என தெரியவில்லை. ஏனெனில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் மரடோனா தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்துகொண்டார். மரடோனா முழுப்போட்டியில் விளையாடவில்லை எனில் அது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும்.