பாகிஸ்தான் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு போகவேண்டாம்: ட்ராவிட் பெருந்தன்மை!
யு-19 உலக கோப்பை வெற்றியை தொடர்ந்து இந்தியா வந்த ராகுல் ட்ராவிட் ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் ஆணையம் நடத்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. உலக கோப்பை வெற்றியை தொடர்ந்து நியூஸிலாந்தில் இருந்து, ட்ராவிட்டின் இந்திய இளம்படை இந்தியா வந்துள்ளது. இந்நிலையில் மும்பையில் ட்ராவிட் மற்றும் கேப்டன் ப்ருத்வி சாவ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ராகுல், “இந்திய அணியின் இளம் வீரர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். தற்போதே இவர்கள் சர்வதேச இந்திய அணியில் விளையாடும் தகுதியை அடைந்துவிட்டார்கள். இறுதிப்போட்டியில் இவர்கள் பெற்ற வெற்றி ஒன்றும் கடுமையானது அல்ல. கால் இறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளின் வெற்றிப் பயிற்சியின் மூலமே இறுதிப்போட்டியை எளிதில் வென்று கோப்பை வென்றுவிட்டனர். இதைவிட கடுமையான போட்டிகளிலும் இவர்களால் வெல்ல முடியும். அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த போது பாகிஸ்தான் வீரர்கள் வருத்தமடைந்துவிட்டனர். நான் அவர்களின் உடை மாற்றும் அரைக்கு சென்று ஆறுதல் கூறினேன். அத்துடன் செய்தியாளர்கள் யாரும் அங்கு சென்று கேள்விகளை எழுப்ப வேண்டாம், அவர்கள் ஏற்கனவே வருத்தத்தில் உள்ளனர் என்றும் கேட்டுக்கொண்டேன். பாகிஸ்தான் இளம் அணியிலும் திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர்”என்று பெருந்தன்மையுடன் கூறினார்.