‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ : இந்திய அணியின் தேர்வு சரியானதா? சறுக்கலா? - அலசல்

‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ : இந்திய அணியின் தேர்வு சரியானதா? சறுக்கலா? - அலசல்

‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ : இந்திய அணியின் தேர்வு சரியானதா? சறுக்கலா? - அலசல்
Published on

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் களம் இறங்க உள்ளன. இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நாளை நடைபெறும் இந்த போட்டியில் விளையாட உள்ள ஆடும் லெவனை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். அது வெற்றிக்கான கூட்டணியாக அமைந்துள்ளாத என்பதை அலசுவோம். 

ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்!

விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா, சுப்மன் கில், புஜாரா, ரகானே (துணை கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அஷ்வின், பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 

இவர்களை தவிர 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருந்த சாஹா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய வீரர்கள் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை. 

ஆறு பேட்ஸ்மேன்கள், இரண்டு சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் மற்றும் மூன்று பவுலர்கள் என்ற கலவையில் இந்தியா களம் இறங்குகிறது. 

இரண்டு சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் ஏன்?

“இந்தியா இரண்டு சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களுடன் களம் இறங்கியுள்ளது சர்ப்ரைஸாக இருக்கலாம். ஆனால் அதுதான் சரியானதாக இருக்கும். ஏனெனில் இந்தியாவுக்காக பேட்டிங் செய்ய பின்வாரிசையில் ஜடேஜா மற்றும் அஷ்வின் இருப்பது பலம். மழை இல்லாமல் இருந்தால் மூன்றாவது நாளிலிருந்து பந்து சுழல ஆரம்பிக்கும். அதே வேளையில் நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள நான்கு வேகப்பந்து வீச்சாளர்களில் இருவர் பேட்டிங் செய்யக்கூடியவர்கள். அதை ஈடுக்கட்டவே இந்த ஏற்பாடு” என்கிறார் பிரபல விளையாட்டு விமர்சகர் ஹர்ஷா போக்லே. 

சுழற்பந்து வீச்சு இந்தியாவின் பலம். இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஷார்டர் பார்மெட் கிரிக்கெட் தொடரில் அந்த அணி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்து விளையாடியது. அது அவர்களுக்கு இரண்டாவது போட்டியில் வெற்றியையும், மூன்றாவது போட்டியில் வெறும் 7 ரன்களில் தோல்வியையும் கொடுத்தது. அதே பாணியை இப்போது இந்தியா இங்கிலாந்தில் கடைபிடித்து தங்களது பலமான சுழற்பந்து வீச்சை எடுத்துள்ளது. 

பேட்டிங்கை பொறுத்தவரை ரோகித் ஷர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரகானே, ரிஷப் பண்ட் என சிறப்பான லைன் அப் அமைந்துள்ளது. முன்பு சொன்னதை போல ஜடேஜா மற்றும் அஷ்வின் பின்வாரிசையில் பலம். அப்படி பார்த்தால் இந்தியா 8 பேட்ஸ்மேன்களுடன் களம் இறங்குகிறது. 

சிராஜ் இருந்திருக்கலாம்!

பவுலர்களில் பும்ரா மற்றும் ஷமியை டிராப் செய்ய வாய்ப்பே இல்லை. ஆனால் இஷாந்த் ஷர்மாவை அணியில் பிக் செய்ததற்கு மாறாக இளம் வீரர் முகமது சிராஜை பிக் செய்திருக்க வேண்டும். 

இஷாந்த கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு கடந்த பிப்ரவரியில்தான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட அணிக்குள் கம்பேக் கொடுத்திருந்தார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான அந்த தொடரில் நான்கு போட்டிகளில் வெறும் ஆறு விக்கெட்டுகளைதான் அவர் வீழத்தியிருந்தார். இருப்பினும் இங்கிலாந்து மண்ணில் இதுவரை இஷாந்த் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 43 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி உள்ளார். அதனால் அணிக்குள் இஷாந்த் பிக் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் முகமது சிராஜ், இஷாந்தை காட்டிலும் சிறப்பான பவுலிங் ஆவரேஜ் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அந்த ஒரு தேர்வை தவிர்த்து இந்தியா ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என தனது பலத்தின் அடிப்படையில்தான் ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளது. நிச்சயம் கோலியின் சேனை சாம்பியன் பட்டத்தை வெல்லும் என நம்புவோம். அதே நேரத்தில் இந்த போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். டாஸ் வெல்கின்ற அணி பேட்டிங்கைதான் நிச்சயம் தேர்வு செய்யும். அதனால் இந்தியாவுக்கு டாஸ் வெல்வது மிகவும் முக்கியம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com