டைமண்ட் லீக் தொடர்.. ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா!
டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில், டைமண்ட் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, 85.01 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாமிடம் பிடித்தார். 91.51 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த ஜெர்மனியின் ஜூலியன் வெபர், முதலிடம் பிடித்தார். ஏழு பேர் களத்தில் இருந்த நிலையில் ஜூலியன் வெபர், இந்தப் போட்டியின் போது இரண்டு முறை 91 மீட்டருக்கு மேல் வீசி தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டார். மேலும், இந்த ஆண்டிற்கான புதிய உலக முன்னணி சாதனையையும் அவர் படைத்தார். அதேநேரத்தில், நீரஜ் சோப்ரா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, டைமண்ட் லீக்கில் 2ஆம் இடம் பிடித்துள்ளார். தான் பங்கேற்ற கடைசி 26 போட்டிகளிலும் நீரஜ் சோப்ரா, முதல் இரண்டு இடங்களுக்குள் ஒன்றை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி குறித்து நீரஜ் சோப்ரா, “இது அவ்வளவு மோசமாக இல்லை. நாங்கள் உலக சாம்பியன்ஷிப்பை நெருங்கி வருகிறோம். எனவே, நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக வீச வேண்டும். சில விஷயங்கள் நன்றாக நடந்தன, சில விஷயங்கள் நடக்கவில்லை. ஆனால் ஜூலியனுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் மிக அதிக தூரம் வீச முடிந்தது. 91 மீட்டர் காட்டியது மிகவும் நன்றாக இருந்தது. முக்கிய சாம்பியன்ஷிப் போட்டிகளில், தொலைதூர எறிதல்களை விட தங்கம் முக்கியமானது. எனவே பதக்கம் வெல்ல என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், அடுத்த மாதம் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கு, நீரஜ் பதிலளிக்க வேண்டியிருக்கும். டோக்கியோவில் மீண்டும் ஒருமுறை வெபரை மட்டுமல்ல, கடந்த ஆண்டு பாரிஸில் 92.97 மீட்டர் தூரம் எறிந்து வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்ற ஒலிம்பிக் சாம்பியனான அர்ஷத் நதீமையும் அவர் எதிர்கொள்ள உள்ளார்.