“தோனி எனக்குள் என்றுமே கேப்டன்தான்” - நெகிழ்ந்த விராட் கோலி!
எனக்குள் தோனி என்றுமே கேப்டனாகவே இருக்கிறார் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஜூலை7ம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் பிறந்தநாள். அவரை கவுரப்படுத்தும்விதமாக ஐசிசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ரசிகர்கள், மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள், இந்திய வீரர்கள் எனப் பலரும் தோனி குறித்து தங்களது கருத்துக்களை அதில் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.
தோனி குறித்த வீடியோவை, ''இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனி என்பது வெறும் பெயரல்ல, அது இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியது. அது உலக அளவில் பலருக்கும் முன்னுதாரணமாய் விளங்கியது. அது மறுக்க முடியாத மரபு கொண்ட பெயர்'' என்ற தலைப்புடன் ஐசிசி பகிர்ந்துள்ளது
ஐசிசி வெளியிட்ட வீடியோவில் பேசியுள்ள கோலி, ''தோனி எப்பொழுதும் கூலாக இருப்பார். அவரின் அமைதியால் கடினமான நேரங்களில் சரியான முடிவுகளை எடுப்பார். அவரிடம் இருந்து நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன். நான் அணிக்குள் வரும் போது தோனி தான் என் கேப்டனாக இருந்தார். எனக்குள் அவர் என்றுமே கேப்டனாகவே இருக்கிறார்.
அவருடன் இருப்பது இலகுவாக எங்களை உணர வைக்கும். நான் அணியின் வெற்றிக்காக எதையும் செய்வேன் என அவர் என்னை நம்பி எனக்கு வாய்ப்பளித்தார். அதனால் தான் எங்களது ஜோடி எப்பொழுதும் சிறப்பானது. நான் எப்பொழுதும் தோனியின் அறிவுரையை கேட்டு நடக்கிறேன்'' என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
தோனி குறித்து பேசிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ''நான் அணிக்குள் நுழையும் பொழுது தோனி கேப்டனாக இருந்தார். அது எனக்கு இலகுவாக இருந்தது. எனக்கு எந்தவித சந்தேகம் இருந்தாலும் அமைதியாக அவர் விளக்கம் அளிப்பார்'' எனத் தெரிவித்துள்ளார்