இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
ஆண்டிகுவாவில் உள்ள நார்த் சவுண்ட் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, தோனி மற்றும் ரஹானே ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 4 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் குவித்தது. 252 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். அந்த அணி, 38.1 ஓவர்களில் 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
78 ரன்கள் எடுத்த தோனி ஆட்டநாயகன் விருதுபெற்றார்.
பின்னர் தோனி கூறும்போது, ‘கடந்த சில ஆட்டங்களில் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி வந்ததால் பின் வரிசையில் ஆடிய எங்களை போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது கிடைத்ததை பயன்படுத்தி ரன்கள் குவித்தேன். மூன்று, நான்கு விக்கெட்டுகள் விழுந்த பிறகு பார்ட்னர்ஷிப் முக்கியம். எனது மனதுக்குள் இந்த விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுக்கலாம் என நினைத்தேன். கேதார் ஜாதவுடன் இணைந்து அந்த ரன்களை எடுத்தோம். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசினார்கள். குறிப்பாக குல்தீப் யாதவ். இவர் ஐபிஎல் போட்டிகளில் நன்றாக பந்து வீசியிருந்தாலும் சர்வதேச போட்டிகளுக்கு வந்துவிட்டால், பந்துவீச்சில் வெரைட்டி காட்டுவது முக்கியம். அதை அருமையாக செய்தார் குல்தீப். கடந்த போட்டியை விட இந்தப் போட்டியில் அவர் சிறப்பாக பந்துவீசினார்’ என்றார்.