"தோனியை ஓரங்கட்டக் கூடாது" - முகமது கைஃப் !

"தோனியை ஓரங்கட்டக் கூடாது" - முகமது கைஃப் !

"தோனியை ஓரங்கட்டக் கூடாது" - முகமது கைஃப் !
Published on

முன்னாள் கேப்டன் தோனியை அணியிலிருந்து ஓரங்கட்டும் முயற்சிகளை எடுக்கக் கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக தோனியுடனான அனுபவங்கள் குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் பேசி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் வேறு எதையாவது பேசினாலும் கூட, அவர்களிடம் தோனி குறித்து ஒரு கேள்வியையாவது தொகுப்பாளர் மற்றும் செய்தியாளர்கள் முன் வைத்துவிடுகின்றனர். இதனால் பேட்டியளிப்பவர்களும் தோனி குறித்த கருத்தைப் பேசி விடுகின்றனர்.

இந்த வழக்கப்படி "டைம்ஸ் ஆஃப் இந்தியா" இணையதளத்துக்குப் பேட்டியளித்துள்ள முகமது கைஃப் "தோனிக்கு மாற்று வீரர் என்பதே கிடையாது. அவரின் இடத்துக்கு நாம் இப்போது வரை எத்தனை பேரைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டோம். அதேபோல கே.எல்.ராகுலை அணிக்கு நிரந்தர விக்கெட் கீப்பராக நாம் கருதக்கூடாது. அணிக்கு எப்போது ஒரு நிரந்தர விக்கெட் கீப்பர் தேவை. அந்த விக்கெட் கீப்பர் காயமடைந்தால் கே.எல்.ராகுலை அவசரத்துக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். ரிஷப் பன்ட், சஞ்சு சாம்சன் போன்றவர்களால் தோனியின் இடத்தை எப்போதும் நிரப்ப முடியாது" என்றார்.

மேலும் தொடர்ந்த முகமது கைஃப் " இப்போது நாம் சச்சின், டிராவிட் போன்றோருக்கு மாற்றாகக் கோலி, ரஹானே, புஜாரா ஆகியோரை சொல்கிறோம். அவர்கள் ஓரளவுக்கு அந்த இடத்தை நிரப்பிவிட்டார்கள். ஆனால் தோனியின் இடம் அப்படி அல்ல. நான் இப்போதும் சொல்கிறேன், அவர்தான் உலகின் நம்பர் ஒன் விக்கெட் கீப்பர். அவர் அதற்கு முழுமையான உடற்தகுதியுடன் இருக்கிறார். அதனால் அவரை விரைவாக ஓரங்கட்ட நினைக்கக் கூடாது" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com