அயர்லாந்து போட்டியில் ஆச்சரியப்படுத்திய தோனி! கொண்டாடும் ரசிகர்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் வீரர்களின் கிட் பேக்கை சுமந்ததோடு, வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்ததை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டியில் இந்திய அணி விளையாடியது. முதல் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அப்போது பேசிய கேப்டன் கோலி, இன்று விளையாடாத சில வீரர்களுக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. தொடக்க வீரர் தவான், தோனி, புவனேஷ்வர்குமார், பும்ரா, ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ராகுல், தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரெய்னாவும், ராகுலும் சிறப்பாக விளையாடி இரண்டாவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி விளையாடிக் கொண்டிருந்த போது பேட்ஸ்மேன்களின் கிட்பேக்கை சுமந்தபடி மைதானத்துக்குள் நுழைந்தார் தோனி. ரசிகர்கள் தோனி, தோனி என ஆரவாரம் செய்தனர். வழக்கம்போல் அந்த மெல்லிய புன்னகையுடன் விளையாடிக் கொண்டிருந்த ரெய்னா, மற்றும் ராகுலுக்கு தண்ணீர் கொண்டுவந்தார். வழக்கமாக அணியில் புதிதாக வருபவர்களே இந்த வேலையை செய்வார்கள். ஆனால் சீனியர் வீரர் ஒருவர் இப்படி செய்ததை தோனி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.