சத்தமில்லாமல் தோனியின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா - என்ன தெரியுமா?

சத்தமில்லாமல் தோனியின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா - என்ன தெரியுமா?

சத்தமில்லாமல் தோனியின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா - என்ன தெரியுமா?

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கேப்டன் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக, கடந்த ஜனவரி 18ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் தொடக்க வீரரான சுப்மன் கில் இரட்டைச் சதம் பல சாதனைகளை நிகழ்த்தினார். அந்தப் போட்டியில் ரோகித் சர்மாவும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 38 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் அடித்த இரண்டு சிக்ஸர்களும் தற்போது சாதனையாக மாறியிருக்கிறது. ஆம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய மண்ணில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் தோனியே முதலிடத்தில் இருந்தார். அவர் 123 சிக்ஸர்கள் அடித்திருந்தார். அதை, இன்றைய கேப்டன் ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

அவர் அடித்த அந்த இரண்டு சிக்ஸர் மூலம் தற்போது ரோகித் சர்மா 125 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து தோனி (123 சிக்ஸர்) இரண்டாவது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் (71 சிக்ஸர்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர். விராட் கோலி (66 சிக்ஸர்) 4வது இடத்திலும், யுவராஜ் சிங் (65 சிக்ஸர்) 5வது இடத்திலும் உள்ளனர். இதில் தற்போது ரோகித், விராட் கோலி ஆகிய இருவர் மட்டுமே விளையாடி வருகின்றனர்.

உலக அளவிலும் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 4வது இடத்தில் உள்ளார். அவர் 239 போட்டிகளில் விளையாடி இதுவரை 265 சிக்ஸர்கள் அடித்து, 4வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், மேற்கிந்திய தீவு அணி வீரர் 331 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும், இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா 270 சிக்ஸர்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர். 5வது இடத்தில் முன்னாள் இந்திய கேப்டன் தோனி உள்ளார். அவர், 229 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ரோகித் சர்மா, இன்னும் 6 சிக்ஸர்கள் அடித்தால், ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறுவார்.

மேலும், ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அளவில் முதலிடத்திலும் சர்வதேச அளவில் இரண்டாம் இடத்திலும் உள்ளார். அவர் ஓர் இன்னிங்ஸில் அதிகபட்சமாக 16 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் 16 சிக்ஸர்கள் அடித்ததுடன், அன்றைய போட்டியில் இரட்டைச் சதமும் அடித்தார். அதேநேரத்தில் இந்தப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் மோர்கன் 17 சிக்ஸர்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அதுபோல் சர்வதேச அளவில் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித், 2வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் மேற்கிந்திய தீவு அணி வீரர் கெய்ல் முதல் இடத்தில் உள்ளார். அதுபோல் டி20 போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித்தே முதல் இடத்தில் உள்ளார். அவர், இதுவரை 182 சிக்ஸர் அடித்துள்ளார்.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com