இந்தியா வெற்றி பெறுமா? - புள்ளிவிவரம் கூறும் தோனி சென்டிமெண்ட்
நடப்பு உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் இந்தப் போட்டி இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 239 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 5 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. இதன்பின்னர் களமிறங்கிய பந்த் மற்றும் பாண்ட்யா சற்று நேரம் தாக்குப் பிடித்து விளையாடினர். ரிஷப் பந்த் 32 ரன்களுக்கு அவுட் ஆனார். ஹர்திக் பாண்ட்யாவும் 32 ரன்களில் அவுட் ஆனார். தற்போது தோனி மற்றும் ஜடேஜா களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் மகேந்திர சிங் தோனி ஆட்டமிழக்காமல் இருந்தால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என ரசிகர்கள் நம்புகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக முந்தைய தரவுகளும் உள்ளன. அதன்படி தோனி ஆட்டமிழக்காமல் இருந்த 47 போட்டிகளில் இந்தியா வெற்றிப் பெற்றுள்ளது. தோனி ஆட்டமிழக்காமல் இருந்த 2 போட்டிகளில் மட்டும்தான் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.