தோனியின் செல்ல மகள் ஜிவா மலையாளத்தில் பாடும் பாடலின் வீடியோ, தற்போது இணையத்தில் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவரின் ஆட்டத்துக்கு ரசிகர்கள் ஏராளம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இவரின் செல்ல மகள் ஜிவாக்கு தற்போது இணையத்தில் அதிக ரசிகர்கள் குவிந்து வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஏனெனில் ஜிவா தனது தந்தையுடன் விளையாடுவது, விராட் கோலியுடன் பேசுவது என சின்ன சின்ன செயல்களும் இணையத்தில் வீடியோவாக வெளிவந்து தொடர்ந்து வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் ஜிவாவுக்கு தனியாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் பக்கங்கள் ஏராளமாக ஆரம்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஜிவா மலையாள மொழியில் கிருஷ்ணர் பாடல் ஒன்றை மழலை குரலில் பாடி அசத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 15 மணி நேரத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜிவா, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியுடன் தனது இல்லத்தில் பேசிய வீடியோ இணையத்தில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.