ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு ஒரு நாள் போட்டிகளில் தோனிக்கு ஓய்வு அளிக்க உள்ளதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட, டி20 தொடரை ஆஸ்தி ரேலிய அணி கைப்பற்றியது. இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. ஐதராபாத்தில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடந்த 2-வது ஒரு நாள் போட்டியில், கடைசி ஓவரில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 3 வது போட்டி, ராஞ்சியில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் உஸ்மான் கவாஜாவின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன் எடுத்தது. கவாஜா, தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 104 ரன் எடுத்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டையும் ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 281 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. கேப்டன் விராத் கோலி சிறப்பாக ஆடி 123 ரன் எடுத்தார். விஜய் சங்கர் 32 ரன் எடுத்தார். மற்றவர்கள் யாரும் நிலைத்துநிற்கவில்லை. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஜம்பா தலா 3 விக்கெட்டும் லியான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
நான்காவது ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது. இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்ததும் பேசிய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார், ‘’அடுத்த இரண்டு ஒரு நாள் போட்டிகளில், தோனிக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. அவருக்குப் பதிலாக ரிஷாப் பன்ட் பங்கேற்பார்’’ என்றார்.
அவர் மேலும் கூறும்போது, ‘’உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியா விளையாடும் கடைசி ஒரு நாள் தொடர் என்பதால் அனுபவத்துக்காக ரிஷாப்புக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அணியில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. முகமது ஷமிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அது சரியாகவில்லை என்றால் அவருக்குப் பதில் புவனேஷ்வர்குமார் களமிறங்குவார்’’ என்றார்.
அடுத்தப் போட்டிகளில் அணியில் மாற்றம் இருக்கும் என்று கேப்டன் விராத் கோலியும் கூறியிருந்தார். தவானுக்கு பதில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.