"தோனி உயர்ந்தாலும் நட்பை மறக்கவில்லை" உருகும் முன்னாள் பவுலர் !
தோனி தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் உயர்ந்துக்கொண்டே சென்றாலும் தன்னுடனான நட்பை இப்போதும் மறக்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி. சிங் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தோனி தலைமையிலான இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கைப்பற்றிய அணியில் விளையாடியவர் ஆர்.பி.சிங். இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடியவர். மேலும் இவர் தோனிக்கு நெருங்கிய நண்பராகவும் இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற்ற ஆர்.பி.சிங், இப்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ராவுடனான கலந்துரையாடலில் பங்கேற்ற ஆர்.பி.சிங் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார், அப்போது "தோனியும் நானும் ஒன்றாக நிறைய நேரங்கள் செலவிடுவோம். பின்பு அவர் இந்திய அணிக்கு கேப்டனாக உயர உயர சென்றுக்கொண்டு இருந்தார். ஆனாலும் எங்களது நட்பு இன்னமும் அப்படியேத்தான் இருக்கிறது. ஆனால் கிரிக்கெட்டை பொருத்தவரை எங்கள் இருவரிடையே மாறுபட்ட கருத்துகள் உண்டு" என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்த அவர் "நான் அப்போது இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தேன். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் நிச்சயம் என் பெயர் இடம் பெற்று இருக்கும். ஐபிஎல் தொடர்களில் 4 முறை அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்தேன். ஆனால் அதன் பின்பு எனக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. என்னை ஏன் தேசிய அணியில் சேர்க்கவில்லை என்ற கேள்விக்கு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் வாய்ப்பு வழங்கப்படும் என தேர்வாளர்கள் கூறினார்கள்" என வேதனையுடன் தெரிவித்தார் ஆர்.பி.சிங்.