இந்தியாவின் தோல்விக்கு தோனி மட்டுமே காரணமா? .. பார்க்க தவறும் காரணங்கள்

இந்தியாவின் தோல்விக்கு தோனி மட்டுமே காரணமா? .. பார்க்க தவறும் காரணங்கள்
இந்தியாவின் தோல்விக்கு தோனி மட்டுமே காரணமா? .. பார்க்க தவறும் காரணங்கள்

உலகக் கோப்பை தொடரில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. இந்திய அணி தோல்வியை தழுவியது குறித்து நேற்று இரவு முதல் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதில், பெரும்பாலானவை கடைசி நேரத்தில் தோனி - கேதர் ஜாதவ் ஜோடியின் திணறல் ஆட்டத்தை பற்றியதாகத்தான் இருந்தது. அந்த விமர்சனங்களில் உண்மை இல்லாமல் இல்லைதான். கடைசி 5 ஓவர்களில் 20 சிங்கள் எடுத்ததை யாரும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. அதுவும் வெற்றிப்பெற வேண்டும் என்ற முனைப்பு கொஞ்சம் கூட இல்லாமல் அவர்கள் விளையாடிய விதம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கி விட்டது.

ஆனால், நேற்றைய போட்டியை பொறுத்தவரை இந்திய அணியின் தோல்விக்கு பின்னால் பார்க்கவேண்டிய காரணங்கள் சில இருக்கின்றன. எல்லா காரணங்களையும் தவறவிடாமல் பார்ப்பதுதான் சரியானதாக இருக்கும்.

‘பேட்டிங் சாதகமான பிட்ச்’

நேற்றைய போட்டியில் டாஸ் மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் ஆடுகளம் தொடக்கத்தில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். அதனால் யார் டாஸ் வென்றிருந்தாலும் முதலில் பேட்டிங் எடுத்திருப்பார்கள். அப்படிதான் இங்கிலாந்து கேப்டன் மோர்கனும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணிக்கு ராய் மீண்டும் திரும்பியது கூடுதல் பலம். 

கோட்டை விட்ட ராய் ‘அவுட்’ - ரிவ்யூ கேட்காதது ஏன்?

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்தனர். அதுவும் 22.1 ஓவருக்குள் இவ்வளவு ரன்களை அடித்துவிட்டனர். ராய் 66 ரன்கள் அடித்து முதல் வீரராக ஆட்டமிழந்தார். இதுதான் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துவிட்டது. இந்த ஜோடியை பிரிக்க இந்திய வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவேயில்லை. 

ஆனால், தொடக்கத்திலே ராய் விக்கெட்டை எடுக்கும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்தது. ஹர்திக் பாண்ட்யா வீசிய 11 ஆவது ஓவரில் ராய் அடிக்க முற்பட்டார். அது அவரது கையுறையில் உரசி சென்றதுபோல் இருந்தது. இந்திய தரப்பில் எல்லோரும் அவுட் கேட்டனர். ஆனால், நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இருப்பினும், தோனி ரிவ்யூ கேட்கலாம் என அறிவுருத்தவில்லை. விராட் கோலியும் ரிவ்யூ கேட்கவில்லை. பின்னர், ரிப்ளேவில் பார்த்த போது பந்து ராயின் கையுறையில் பட்டது தெளிவாக தெரிந்தது. இதுஇந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. தொடக்கத்திலே முதல் விக்கெட் வீழ்ந்திருந்தால் அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்திருக்கும். பேர்ஸ்டோவின் அதிரடிக்கு ராய் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். அதனால்தான் ரன் கிடுகிடுவென உயர்ந்தது.


இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் ஏன்?

வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணி இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது மிகப்பெரிய தவறான ஒன்றாக மாறிவிட்டது. மைதானத்தை நன்கு கணித்த இங்கிலாந்து ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளராக ரஷிலை மட்டுமே களமிறக்கியது. சாஹல்(88), குல்தீப்(72) இருவரும் சேர்ந்து 160 ரன்களை வாரி வழங்கினர். இவர்கள் இருவரது ஓவரையும் பேர்ஸ்டோவ், ராய் நன்றாக பயன்படுத்தி சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் பறக்கவிட்டனர்.

மெதுவான பந்துவீச்சில் திணறிய இந்திய பேட்ஸ்மேன்கள்

338 ரன்கள் என்ற இமாலய இலக்கு. இந்திய அணியின் கைவசமிருந்த முக்கிய விக்கெட்டுகள். பெரும்பாலான ரசிகர்கள் இந்திய அணி அதிரடி விருந்து படைத்து இலக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கும் என எண்ணினர். ஆனால் நிகழ்ந்ததோ வேறு. SLOW BALLS எனப்படும் மெதுவாக வீசப்படும் பந்துகளை இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தின் பிற்பாதியில் பெரும்பாலும் வீசினர். இதன்மூலம் இந்திய பேட்ஸ்மேன்களின் திட்டங்களை உடைத்தனர். அவர்களின் துல்லியமான பந்துவீச்சால் இந்திய அணியால், இலக்கின் அருகில் கூட நெருங்க முடியவில்லை. மெதுவாக பந்துகளை வீசும் திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றியது இங்கிலாந்து அணி. 

பும்ரா நேர்த்தி ஷமியிடம் இல்லை

முந்தைய போட்டிகளில் நேர்த்தியாக பந்துவீசிய இந்திய பந்துவீச்சாளர்கள், இப்போட்டியில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். இறுதி ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர் ஷமியும் ரன்களை அதிகமாக விட்டுக் கொடுத்தார். அதாவது கடைசி 3 ஓவர்களில் அவர் 45 ரன்களுக்கு மேல் கொடுத்தார். 5 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினாலும், இறுதிக் கட்டத்தில் சிறப்பாக பந்துவீச தவறி விட்டார். இந்திய அணி, இறுதி ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தது ஆட்டத்தின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம் எனலாம்.

தொடக்கத்தில் கூட பும்ரா 3 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஆனால், மற்ற வீரர்களின் ஓவர்களை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பதம் பார்த்தனர். அதனால்தான் தொடக்கத்திலே ஷமிக்கு பதிலாக சாஹல், ஹர்திக் பந்துவீசினர்.

முக்கியமான கட்டத்தில் ரோகித் ரிஷப் அவுட்

இளம் வீரர் ரிஷப் பந்த் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மெதுவாக வீசப்படும் பந்துகள் மூலம் ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் ஆட்டமிழந்ததால், இந்திய அணியால் அதன் பிறகு மீளவே முடியவில்லை. பேட்டிங்கில் மீண்டும் மத்திய மற்றும் கீழ்மத்திய வரிசை பேட்ஸ்மேன்கள் பெரிதும் சோபிக்காமல் போனது போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாகக் கருத்தப்படுகிறது.

மொத்தத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. வரும் போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கவனம் செலுத்தி, மேம்பட்ட ஆட்டத்தை இந்திய வீரர்கள் வெளிப்படுத்த வேண்டுமென்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com