''ஐபிஎல் தவறுகளை ஆராய்ந்து பார்க்க நேரமில்லை; உலகக்கோப்பைக்கு செல்ல வேண்டும்'' - தோனி
ஒரு அணியாக இந்த ஐபிஎல் தொடர் சிறப்பாகவே அமைந்ததாக தோனி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் நேற்று களம் கண்டன. இப்போட்டியில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-ஆவது முறையாக மும்பை கோப்பையை வென்றது. சிறப்பாக பந்துவீசிய பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற மும்பை அணிக்கு 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னைக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தோல்விக்கு பின் தோனி மனம் திறந்து பேசியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ ஒரு அணியாக இந்த தொடர் சிறப்பாகவே அமைந்தது. ஆனால் எப்படி ஃபைனலுக்கு வந்தோம் என திரும்பி பார்க்கும்போது, இந்த ஆண்டு வெகு சிறப்பாக விளையாடி இந்த இடத்திற்கு வந்ததாக தோன்றவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படவில்லை.
போட்டியின்போது இரண்டு அணிகளுமே கோப்பையை மாறி மாறி கைப்பற்றிக்கொண்டிருந்தோம். இரண்டு அணிகளுமே ஏகப்பட்ட தவறுகளை செய்தோம். ஆனால் குறைந்த தவறுகள் செய்த அணியே தற்போது வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியிலும் கூட பவுலர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். எப்போதெல்லாம் விக்கெட் தேவைப்பட்டதோ, அப்போது சிறப்பாக செயல்பட்டு பவுலர்கள் விக்கெட்களை வீழ்த்தினர். எந்தெந்த இடங்களில் தவறு செய்தோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆனால் உண்மையில் அதற்கு தற்போது நேரம் இல்லை. உலகக்கோப்பைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அதற்கு பின் நேரம் கிடைக்கும்போது ஐபிஎல் தவறுகளை ஆராய முடியும்” என்றார். அப்போது அடுத்த ஐபிஎல் தொடரில் நீங்கள் பங்கேற்பீர்களா எனக் கேட்டதற்கு, நம்பிக்கை இருக்கிறது என்றும் தோனி தெரிவித்தார்.