
தோனி நன்றாக ஆடுகிறாரோ இல்லையோ அவர் ரசிகர்கள் எங்கு சென்றாலும் அவரை தேடிக்கொண்டிருப்பார்கள். அவர் களத்தில் இறங்கினால், ’தோனி தோனி’ என்ற கோஷமும், சிக்சர் அடித்தால், வரும் கைத்தட்டல்களும் மற்ற வீரர்களுக்கு கிடைக்குமா? என்று தெரியவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இருந்து தன்னை விடுவித்துள்ள தோனி, தற்போது இந்திய ராணுவத் துடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். வரும் 15 ஆம் தேதி வரை அந்தப் பணியில் இருப்பார்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ்- இந்திய அணி மோதிய இரண்டாவது டி20 போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 67 ரன்கள் எடுத்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப், 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்திருந்த போது, மழை பெய்ததால், டிஎல்எஸ் முறைப்படி, இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் தோனி விளையாட வில்லை என்றாலும் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் போட்டியைக் காண வந்திருந் தனர். அவர்கள், ’மிஸ் யூ தோனி’, ‘உங்களால் பெருமை’ போன்ற வாசகங்களை கொண்ட, பதாகைகளை பிடித்தபடி நின்றிருந்தனர்.