முன்னாள் கேப்டன் தோனியின் செல்ல மகள் ஜிவா, மழலை குரலில் சொல்லும் கிறிஸ்துமஸ் வாழ்த்து அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
கிரிக்கெட்டில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. உலகளவில் ரசிகர்களை பெற்றுள்ள இவரின் இடத்தை பிடிப்பதற்கு இன்று வரை யாரும் வரவில்லை என்று, கிரிக்கெட் துறையைச் சேர்ந்த பல வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இவரின் செல்ல மகள் ஜிவா, தொடர்ந்து சமூக வலைத்தளங்களை தனது பக்கம் ஈர்த்து வருகிறார். சமீப காலங்களில் பாடல் பாடுவது, சமையல் செய்வது, குறும்புத்தனமான செயல்களால் அனைவரையும் சிரிக்க வைப்பது என ஜிவாவின் சுட்டித்தனங்கள் ஏராளம். இந்த வீடியோக்களை காணும் நெட்டிசன்கள், சில தினங்களுக்குள் அந்த வீடியோக்களை வைரலாக்குகின்றனர்.
இந்த வரிசையில் தற்போது புதிதாக சேர்ந்துள்ள வீடியோதான், ஜிவாவின் கிறிஸ்துமஸ் வாழ்த்து வீடியோ. தனது தந்தையுடன் காரில் செல்லும் ஜிவா, தனது மழலை குரலால் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை கூறுகிறார். இதற்கு தோனி, தலையை ஆட்டிக்கொண்டே அதை ரசிக்கிறார். ஜிவாவின் குரலில் அழகாக ஒலிக்கும் இந்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.