"தோனி அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பையிலும் விளையாடுவார்" - பயிற்சியாளர் தகவல் !
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார் என்று அவரது சிறுவயது கிரிக்கெட் பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்து டி20 உலகக் கோப்பை போட்டியும் ஒத்திவைக்கப்பட இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதனால் தோனியின் ரசிகர்கள் மிகவும் கவலையில் இருக்கின்றனர். எங்கே தோனி சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவாரோ என்பதுதான் அது. மேலும் பல வீரர்கள் தோனி மீண்டும் அணிக்குத் திரும்புவது குறித்து தங்களது கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ள தோனியின் சிறுவயது பயிற்சியாளரான கேஷவ் பானர்ஜி "எல்லோரையும் கூப்பிட்டு வைத்து நான் ஓய்வுபெறப் போகிறேன் என அறிவிக்கும் நபர் அல்ல தோனி. அவருக்கு எப்படி அதைத் தெரிவிப்பது எனத் தெரியும். அவர் விளையாடியது போதும் என நினைத்தால் முறைப்படி பிசிசிஐக்கு தகவல் தெரிவிப்பார், ஊடகங்களுக்குத் தெரிவிப்பார். அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும்போதும் இவ்வாறே செய்தார்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்த அவர் "சமூகவலைத்தளங்களில் பரவும் செய்திகள் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். இப்போதெல்லாம் நிறையப் பொய் செய்திகளே அதிகம் வருகின்றன. ஏன் எல்லோரும் தோனியின் ஓய்வை எதிர்பார்க்கிறார்கள் எனப் புரியவில்லை. எனக்கு தோனியை பற்றி நன்றாகவே தெரியும், அந்த முடிவை அவர் தெரிவிக்கும் போது முறைப்படி அறிவிப்பார்" என்கிறார் கேஷவ் பானர்ஜி.
இந்திய அணிக்கு தோனி திரும்பும் வாய்ப்பு குறித்துப் பேசிய அவர் " ஐபிஎல் போட்டிகளை வைத்து தோனியின் திறனை எடைபோடுகிறார்களா ? அவர் இப்போதும் ஃபிட்டாகவே இருக்கிறார். அவர் டி20 உலகக் கோப்பை அடுத்தாண்டுக்கு ஒத்திவைத்தாலும் விளையாடும் திறனைப் பெற்றிருக்கிறார்" என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.