'நாட் அவுட்டுக்கு எல்லாம் அவுட் கொடுத்த அம்பயர் மகாபிரபு' கடுப்பான தோனியும், கார்த்திக்கும் !
ஆசியக் கோப்பை 2018 கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்றன. 6 அணிகளில் 4 அணிகள் மட்டும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றதால் இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய இரு அணிகள் வெளியேறிவிட்டன. இந்நிலையில் நேற்று இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு கோப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். இது தோனி கேப்டனாக பங்கேற்கும் 200 ஆவது போட்டியாகும். ஆனால் நேற்றைய இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி "டை"யில் முடிவடைந்தது. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 252 ரன்களை எடுத்தது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா, தவான், பும்ரா, புவனேஷ்வர் குமார், சாஹல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, ராகுல், மணிஷ் பாண்டே, சாஹர், கரீம் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுலும், ராயுடுவும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடிய நிலையிவ் 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தனர். தலா 4 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 57 ரன்களை எடுத்த ராயுடுவும், 60 ரன்களுடன் லோகேஷ் ராகுலும் ஆட்டமிழந்து வெளியறினர். இதனையடுத்து தோனியும், தினேஷ் கார்த்திக்கும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்துக்கொண்டிருந்தனர்.
இந்திய அணியின் ஸ்கோர் 25.5 ஆவது ஓவரின்போது 142 ஆக இருந்தபோது அகமதி வீசிய பந்து தோனியின் கால்களில் பட்டது. இதனையடுத்து அம்பயர் கிரகோரி பிராத்வைட்டிடம் எல்பிடபுள்யுவுக்கு அப்பீல் கேட்டார். உடனடியாக, அவரும் தோனிக்கு அவுட் கொடுத்துவிட்டார். தோனியால் ரிவ்யூ கேட்க முடியாது. ஏனென்றால் பழம் போல் ரஷீத் கானின் பாலில் அவுட்டான ராகுல் அம்பயரிடம் அவுட் கேட்டார். அது எளிதான அவுட் என அனைவருக்கும் தெரிந்தது. ஆனாலும் ராகுல் ரிவ்யூ கேட்கவே அது வீணானது. இதனால் தோனியால் ரிவ்யூ கேட்க முடியாமல் போனது.
ஆடுகளத்தில் இருந்து வெளியேறிய போதே தோனி அவுட் கொடுக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்தார். இந்நிலையில் தொலைக்காட்சியில் ரீப்ளேயில் பந்து ஸ்டம்புக்கு நேராக செல்லாமல், லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்றது தெளிவாக தெரிந்தது. அதேபோல தினேஷ் கார்த்திக் 44 ரன்கள் எடுத்திருந்த போது, நபி பந்துவீச்சில் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் கொடுத்தார், அம்பயர் கிரகோரி பிராத்வைட். இந்த அவுட்டும் நாட் அவுட் என ரீப்ளேயில் மிகத் தெளிவாக தெரிந்தது.
முக்கியமான இந்த இரு விக்கெட்டுகள் அம்பயரின் தவறான முடிவால் இந்தியாவின் பேட்டிங் சரிந்தது. கடைசியில் ஆப்கானிஸ்தானுடனான போட்டி டையில் முடிவடைந்தது.இதனால் அம்பயர் கிரகோரி பிராத்வைட்டை சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். மேலும், எளிதான அவுட்டுக்கு ரிவ்யூ கேட்ட கே.எல்.ராகுலையும் கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர்.
ரசிகர்கள் இன்னும் ஒருபடி சென்று இன்றைய மேன் ஆஃப் தி மாட்ச் விருதுக்கு அம்பயர் கிரயக் பிராத்வைட்தான் என கலாய்த்து வருகின்றனர். அதே நேரத்தில் ரிவ்யூ கேட்பதற்கு முன்பு இந்திய வீரர்களும் கொஞ்சம் யோசிக்க வேண்டும். தோனி போல அதற்கு அனுபவம் வேண்டும், இப்போது ராகுலும், கோலி போல ரிவ்யூ கேட்பதில் மோசமாகி வருகிறார் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்தனர்.