பயிற்சிலேயே பறக்கும் பந்துகள் : ஐபிஎல் பேட்ஸ்மேன்கள் பிரதிபலிப்பது என்ன ?
ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளது. நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் ஐபிஎல் தொடர் இந்த முறை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரசிகர்கள் கூட்டம் இல்லாத அரங்கம், கலகலப்பு இல்லாத மைதனாம் என ஐபிஎல் தொடரில் ஒரு வெறுமை இருக்கும் என்பது உண்மை. அத்துடன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறாமல் முற்றிலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதால், இந்திய ரசிகர்கள் அதனை டிவியில் மட்டுமே காண்பார்கள். எனவே இந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வீரரும் தங்கள் ரசிகர்களின் உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்ள மைதானத்தில் பல மாயங்களை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடர் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான். அனல் பறக்கும் ஆட்டக்களத்தில் பந்துகளை அடித்து வான வேடிக்கை காட்டும் பேட்ஸ்மேன்களை ரசிகர்கள் கொண்டாட தவறுவதில்லை. அது வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான கிறிஸ் கெயில், ரஸல் ஆக இருந்தாலும் சரி, ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், வாட்சனாக இருந்தாலும் சரி, ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடத்தான் செய்வார்கள்.
அதிக பந்துகளை சந்தித்து பொறுப்புடன் விளையாடும் வீரர்கள் அணிக்கு முக்கியம் என்றாலும், குறைந்த பந்துகளை சந்தித்து சிக்ஸர்களை பறக்கவிடும் ஹர்திக் பாண்ட்யா போன்ற அதிரடி மன்னன்களே ரசிகர்களுக்கு முக்கியம். இதனால் சிக்ஸர்களால் உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தும் அதிரடி மன்னர்களுக்கு இருக்கும் ரசிகர்களை மத்தியில் இருக்கும் மவுசே தனி தான். அவர்கள் களத்தில் இறங்கினால் மைதானத்தில் காது கிழிய விசிலும், கைதட்டல்களும் பறக்கும்.
அதனால் உற்சாகம் அடையும் வீரர்கள் ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்ப பந்துகளை உயரமான சிக்ஸர்களாக சிதறடிப்பார்கள். இந்த வித்தையை நன்கு கற்றவர்கள் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தான். இந்த சிக்ஸர்கள் ரசிகர்களை மட்டுமின்றி ஐபிஎல் அணிகளின் நிர்வாகங்களையும் கவர்ந்து விடுகின்றன. இதனால் ஐபிஎல் தொடரில் அதிரடியாக ரன்களை வாரி குவிக்கும் வீரர்கள், ஏலத்தின்போது கோடிகளையும் வாரிக்குவிக்கின்றனர்.
இதனை நன்கு உணர்ந்துகொண்ட பேட்ஸ்மேன்கள் அனைவரும், தற்போது சிக்ஸர் மன்னர்களாக மாற துடித்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை கேப்டன் தோனி முதல், மும்பை கேப்டன் ரோகித் வரை தற்போது இந்த பாதையில் தான் சென்றுகொண்டிருக்கின்றனர். அதற்கேற்ப சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக் கேப்டன் தோனியின் பயிற்சி வீடியோ வெளியாகியிருந்தது.
அதில் தோனி தொடர்ந்து சிக்ஸர் அடிக்கும் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார். இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணி அண்மையில் வெளியிட்டிருந்த வீடியோவில் ரோகித் ஷர்மா உயரமான சிக்ஸர்களை பயிற்சியின்போது விளாசியிருந்தார்.
அதுமட்டுமின்றி வளர்ந்து வரும் இளம் வீரரான ரிஷாப் பண்ட் பயிற்சி எடுக்கும் வீடியோவை அண்மையில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெளியிட்டிருந்தது. அதில் தொடர்ந்து சிக்ஸர்களை அவர் அடித்திருந்தார். குறிப்பாக உயரமான சிக்ஸர்களை அடிப்பதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டிருந்தார்.
இதுபோன்று சில வீரர்களின் சிக்ஸர் பயிற்சி வீடியோக்கள் தான் வெளியாகியிருக்கின்றன. இன்னும் வீடியோ வெளியாகாத பல சிக்ஸர் ஜாம்பவான்களும் ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.