“தவான் இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பில்லை” - மைக்கேல் ஹசி

“தவான் இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பில்லை” - மைக்கேல் ஹசி
“தவான் இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பில்லை” - மைக்கேல் ஹசி

உலகக் கோப்பை தொடரில் இந்திய வீரர் தவான் விளையாடதது இந்திய அணிக்கு பெரிய பாதிப்பாக இருக்காது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி தெரிவித்துள்ளார். 

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வீரர் ஷிகர் தவானுக்கு ஆஸ்திரேலியாவுடனான போட்டியின் போது இடது கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இவர் அந்தப் போட்டியில் ஃபீல்டிங் செய்ய வரவில்லை. இதனைத் தொடர்ந்து ஷிகர் தவானுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவரது கைவிரல் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதன் காரணமாக ஷிகர் தவான் உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். 

இந்நிலையில் ஷிகர் தவான் உலகக் கோப்பையிலிருந்து விலகியது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தவான் உலகக் கோப்பையிலிருந்து விலகியது இந்திய அணிக்கு பெரிய அளவில் பாதிப்பாக இருக்காது. இந்திய அணியில் தவானின் இடத்தை நிரப்ப திறமையான வீரர்கள் உள்ளனர். எனவே இந்திய அணியின் உலகக் கோப்பை பயணத்தில் தவான் இல்லாதது எந்தவித தொய்வும் ஏற்படுத்தாது. இந்திய அணியிலுள்ள வீரர்களின் திறமையை வைத்து பார்க்கும் போது இந்திய அணி இறுதி வரை செல்லும்” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக தவானுக்குப் பதிலாக ரிஷப் பந்த் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான் விளையாடவில்லை. அந்தப் போட்டியில் கே.எல். ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அத்துடன் முதல் விக்கெட்டிற்கு ரோகித் ஷ்ரமாவுடன் ஜோடி சேர்ந்து 136 ரன்கள் சேர்த்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. 

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 7 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இந்திய அணி வரும் சனிக்கிழமை நடக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com