தேவையில்லாத ரன் அவுட் காரணமாக, இந்திய கேப்டன் விராத் கோலியை, தவான் திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவிடம் இழந்த இந்திய அணி, இப்போது ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒரு நாள் போட்டி டர்பனில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 269 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ் 120 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் 3 விக்கெட்டும், சேஹல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்த போது, தொடக்க ஆட்டக்காரர் ரோகித் 20 ரன்னில் மோர்கல் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் தவானுடன் இணைந்தார் கோலி.
இருவரும் வேகமாக ஆடிக்கொண்டிருந்தனர். 12. 2 வது ஓவரில், கிறிஸ் மோரிஸ் வீசிய பந்தை அடிக்க முயன்றார் தவான். ஆனால், பந்து அவர் தொடையில் பட்டுத் துள்ளியது. பந்து எங்கு சென்றது என்று தெரியாத நிலையில் நின்று கொண்டிருந்தார் தவான். அதற்குள் எதிர்முனையில் நின்ற கோலி, ஒரு ரன்னுக்காக பாதி தூரம் ஓடிவந்துவிட்டார். இதை எதிர்பார்க்காத தவான், பிறகு வேகமாக ஓடினார். ஆனால், அதற்குள் மார்க்ரம் பந்தை ஸ்டம்பை நோக்கி மிகச்சரியாக எரிந்தார்.
அவுட் ஆகிவிட்ட தவான் கடுப்பானார். இது தேவையில்லாத ரன் அவுட் என்பதை உணர்ந்த தவான், கோலியை திட்டிக்கொண்டே பெவிலியன் திரும்பினார். அங்கு சென்றும் பயிற்சியாளர் சஞ்சய் பங்காரிடம் இதுபற்றி பேசிக்கொண்டே இருந்தார் தவான்.