டேவிட் வார்னர் இல்லாதது இழப்புதான்: வில்லியம்சன்
டேவிட் வார்னர் அற்புதமான வீரர், அவர் எங்கள் அணியில் இல்லாதது இழப்புதான் என்று ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் சொன்னார்.
சன் ரைசர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஐதராபாத்தில் நடந்த போட்டியில் நேற்று மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 49 ரன் எடுத்தார். ஐதராபாத் அணியில் கவுல் 4 ஓவரில் 17 ரன் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து ஆடிய ஐதராபாத் அணி, ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 16வது ஓவரிலேயே வெற்றி பெற்றது. ஷிகர் தவான் 77 ரன்னும் கேப்டன் கேன் வில்லியம்சன் 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வெற்றிக்குப் பின் பேசிய வில்லியம்சன், ‘இந்த வருடம் டேவிட் வார்னர் இல்லை. அவர் அற்புதமான வீரர். அவரை மிஸ் பண்ணுகிறோம். ஒட்டு மொத்த அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். பந்துவீச்சாளர்களும் சரியான நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தினார்கள். எங்கள் பீல்டிங்கும் அருமையாக இருந்தது. சில ஏரியாவில் நாங்கள் இன்னும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அடுத்தப் போட்டியில் அதில் கவனம் செலுத்துவோம். தவான் சிறப்பாக ஆடினார்’ என்றார்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷிகர் தவான் கூறும்போது, ’நீண்ட நேரம் நின்று அனுபவித்து விளையாடினேன். அணியின் வெற்றிக்கு இது உதவியது. தென்னாப்பிரிக்கா, இலங்கையில் நடந்த போட்டிகள் உள்பட கடந்த சில தொடர்களில் ஆக்ரோ ஷமான ஆட்டத்தைத்தான் வெளிப்படுத்தி வருகிறேன். அதையே இங்கும் தொடர்கிறேன். எங்கள் அணி அனைத்து துறை யிலும் சிறப்பானதாக இருக்கிறது’ என்றார்.
ராஜஸ்தான் கேப்டன் ரஹானே கூறும்போது, ‘நாங்கள் குறைவான ரன்கள் எடுத்துவிட்டோம். 150, 160 ரன்கள் எடுத்திருந்தால் சவாலாக இருந்திருக்கும். நாங்கள் விரைவாக விக்கெட்டை இழந்துவிட்டோம். நல்ல பார்டனர்ஷிப் கிடைக்கவில்லை. சில கேட்ச்களை கோட்டைவிட்டோம். இது முதல் போட்டி. இந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேற வேண் டும்’ என்றார்.