பாட்டியாலாவில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் தேர்வாகி, ஒலிம்பிக் போட்டிக்கான தடகளப் போட்டிகளில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திற்கு தேர்வாகியுள்ளார் திருச்சியை சேர்ந்த தங்க மங்கை தனலட்சுமி.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி நடைபெற்ற தேசிய தடகளப் போட்டியில், பெண்கள் பிரிவில் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார். இவர், 100 மீ தூரத்தை 11.38 வினாடிகளில் கடந்தார். இதன்மூலம், சர்வதேச வீராங்கனை டூட்டி சந்த், ஹீமா தாஸ் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி திருச்சி வீராங்கனை தனலட்சுமி சாதனை படைத்தார். இந்நிகழ்வில், 1998-ஆம் ஆண்டு பி.டி.உஷா நிகழ்த்திய முறியடிக்க முடியாத சாதனையாக இருந்த 23.30 வினாடி என்ற சாதனையை தனலட்சுமி முறியடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில், தடகள வீராங்கனையான தனலட்சுமி 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் (ரிலே) மூன்றாம் இடம் பிடித்து, வருகிற 23-ஆம் தேதி டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டிக்கும் தேர்வாகியுள்ளார்.
திருச்சி விமான நிலையம் அருகே குண்டூர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி, திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் படித்தவர். படிக்கும்போது பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் பல்வேறு சாதனை புரிந்தவர். தற்போது தேசிய அளவிலான போட்டியில் தனி சாதனை படைத்து, சர்வதேச போட்டிகளில் பங்கெடுக்க தகுதி பெற்றுள்ளார்.
தனலட்சுமியின் தாய் உஷா பேசுகையில், “தனலட்சுமி 10 வயது முதலே ஓட்டப்பந்தயத்தில் ஆர்வத்துடன் இருப்பார். பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். அவர் தந்தை உயிருடன் இருந்தபோது, கையில் கடிகாரத்தை வைத்துக்கொண்டு மகளோடு நின்று, ஓட்ட நேரத்தை குறித்து சொல்வார். தற்போது அவர் இல்லை. என்றாலும், அவள் பெற்ற வெற்றி நாங்கள் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் ஆறுதலாக இருக்கிறது” என கண் கலங்க கூறியுள்ளார்.
வீடு முழுவதும் நிறைந்திருக்கும் பதக்கங்களும், பரிசுகளும் தனலட்சுமியின் சாதனையை வீட்டிற்குள் நுழையும்போதே நமக்கு காட்டுகிறது.பெரிய அளவில் பின்புலம் ஏதும் இல்லை என்றாலும், ஆடு, மாடு வளர்த்து வீடு வீடாக சென்று பால் விற்று, வீட்டு வேலை செய்து அதன் மூலம் வரும் வருமானத்தின் மூலமும், சிலரின் உதவி மூலமும் ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களையும், கடும் சிரமங்களுக்கு மத்தியில் sports shoe வாங்கி தந்ததாகவும், கணவரின் மறைவுக்குப் பின் மூன்று பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு சிரமப்பட்ட தனக்கு தனலட்சுமியின் வெற்றி மன மகிழ்ச்சியை தருவதாக கூறுகிறார் தனலட்சுமியின் தாய் உஷா.
கையில் இருந்த நகைகளை எல்லாம் அடகு வைத்துவிட்டு வட்டிக்கு வட்டி கட்டி வருவதாகவும், விளையாட்டுப் போட்டிகளில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் தன் மகளுக்கு அரசு ஏதேனும் ஒரு அரசு பணி கொடுத்து வாழ்வாதாரத்தை காக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை முன் வைக்கின்றார் தாய் உஷா.
சிறுவயது முதலே பல்வேறு தடைகளைத் தாண்டி தடகளப் போட்டியில் பங்கேற்று ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாகியுள்ள தங்க மங்கை தனலட்சுமி ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று தடம் பதிக்க காத்திருக்கின்றார்.
- பிருந்தா