தியோதர் டிராபி: தமிழக வீரர் அபராஜித் அபாரம், பி அணி 302 ரன்கள் குவிப்பு
தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், இந்திய பி அணி, 302 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் நடத்தப்படும் உள்ளூர் ஒருநாள் போட்டித் தொடர்களில் தியோதர் டிராபி தொடரும் முக்கியமானது. இந்த தொடர் ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. நவம்பர் 4ம் தேதி வரை நடக்கும் இத்தொடரில் இந்தியா ஏ, பி, சி என மூன்று அணிகள் மோதுகின்றன. ஏ அணிக்கு ஹனுமா விஹாரி, பி அணிக்கு பார்திவ் பட்டேல், சி அணிக்கு சுப்மான் கில் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராஞ்சியில் இன்று நடக்கும் போட்டியில் இந்தியா ஏ -பி அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஏ அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய பி அணி முதலில் பேட்டிங் செய்தது. ருதுராஜ் கெய்க்வாடும் பன்சாலும் களமிறங்கினர். உனட்கட் பந்துவீச்சில் 3 ரன்னில் பன்சால் வெளியேற, ஜெய்ஸ்வால் வந்தார். இருவரும் பொறுமையாக ஆடினர். ஜெய்ஸ்வால் 31 ரன்களில் கவுல் பந்துவீச்சில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் தமிழக வீரர் பாபா அபராஜித், கெய்க்வாடுடன் இணைந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் இருவருமே சதம் விளாசி னர்.
(கெய்க்வாட்)
113 ரன்கள் எடுத்தபோது கெய்க்வாட், ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே அஸ்வினால் ரன் அவுட் செய்யப்பட்டார் அபராஜித். அவர் 101 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த கேதர் ஜாதவ் 5 ரன்னிலும் விஜய் சங்கர் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 50 ஓவர் முடிவில் பி அணி 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்தது. ஏ அணி தரப்பில் உனட்கட், ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட்டையும் சித்தார்த் கவுல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய ஏ அணி ஆடி வருகிறது.