யூரோ கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய டென்மார்க், இங்கிலாந்து
விறுவிறுப்பின் உச்சத்தை எட்டியுள்ள யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெய்ன், இத்தாலி அணிகளைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு விருந்தளித்து வரும் யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்துவிட்டன. ஏற்கெனவே ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் அரையுறுதிக்கு முன்னேறிவிட்டன. இந்நிலையில் டென்மார்க், செக் குடியரசு, உக்ரைன் மற்றும் இங்கிலாந்து அணிகள் காலிறுதி ஆட்டங்களில் பலப்பரீட்சை நடத்தின. நேற்றிரவு நடைபெற்ற முதல் போட்டியில் டென்மார்க் மற்றும் செக்குடியது அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே டென்மார்க் அணிக்கு டெலானே ஒரு கோலும், 42 ஆவது நிமிடத்தில் டோல்பெர்க் ஒரு கோலும் அடித்தனர்.
இரண்டாவது பாதியில் சுதாரித்து விளையாடிய செக் குடியரது அணி 49 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. அதன் பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதன் மூலம் 2 க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் டென்மார்க் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. நள்ளிரவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்து மற்றும் உக்ரைன் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்துக்கு அந்த அணியின் கேப்டன், ஹாரி கேன் 4 ஆவது நிமிடத்திலேயே ஒரு கோலை பதிவு செய்தார்.
இரண்டாம் பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த இங்கிலாந்து மேலும் 3 கோல்களை அடித்ததோடு மட்டுமல்லாமல், உக்ரைன் அணி கோல் அடிக்க எடுத்த அனைத்து முயற்சிகளையும் தவிடு பொடியாக்கியது. இதன் மூலம் 4 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. தொடரின் இறுதிப் போட்டியாளர்களை தீர்மானிக்கும் முதல் அரையிறுதி ஆட்டம் வரும் 7 ஆம் தேதியும், இரண்டாவது அரையிறுதி 8 ஆம் தேதியும் நடைபெறுகின்றன. முதல் அரையிறுதியில் ஸ்பெய்ன், இத்தாலி அணிகளும், இரண்டாவது அரையிறுதியில் டென்மார்க், இங்கிலாந்து அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.