டெல்லி வன்முறையால் உருக்குலைந்த பள்ளிக்கூடம்

டெல்லி வன்முறையால் உருக்குலைந்த பள்ளிக்கூடம்
டெல்லி வன்முறையால் உருக்குலைந்த பள்ளிக்கூடம்

ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட, ஒரு பள்ளிக் கூடம் கட்டுவதே சிறந்தது என அறிஞர்கள் கூறுவர். ஆனால் ஆயிரம் குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் ஒரு பள்ளியை சின்னாபின்னமாக்கி இருக்கிறது டெல்லியில் நடந்த வன்முறை.

தீக்கிரையான புத்தகங்கள், கரித்துண்டுகளாக காட்சி தரும் கணினிகள், எழுத்தறிவு புகட்டும் கரும்பலகையிலும் கரும்புகை. இப்படி போர் பாதித்த பகுதி போல காட்சித் தரும் இந்தக் கட்டடம், இளம் பிஞ்சுகளின் க‌ல்விக் கண் திறக்கும் தனியார் பள்ளிக்கூடம். டெல்லி ப்ரிஜ்ஜிபூர் பகுதியில் இயங்கி வந்த இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. 800 மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் கடந்த 25 ஆம் தேதி மாலை 5 மணி ‌அளவில் புகுந்த வன்முறை வெறியாட்ட கும்பல், கண்ணில் பட்டதையெல்லாம் அடித்து நொறுக்கி துவம்சம் செய்தது.

பொதுத் தேர்வுக்காக மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள், ஹால் டிக்கெட்டுகள், 1987 ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்ட வந்த மாணவர்களின் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள், புத்தகங்கள் என அனைத்தையும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி வன்முறையில் ஈடுபட்டிருக்கிறது அந்த கும்பல். இருண்டு கிடக்கும் உள்ளத்தில் அறிவு என்னும் விளக்கேற்றும் கரும்பலகையையும், மாணவர்கள் அமர்ந்து படிக்கும் மேஜை நாற்காலிகளையும் கூட அந்த கும்பல் விட்டு வைக்கவில்லை.

பள்ளியில் இருந்த கணினிகள், பள்ளிப் பேருந்து, ஆசிரியர்களின் வாகனங்கள் என அனைத்தையும் தீக்கிரையாக்கிவிட்டு சென்றிருக்கிறது வன்முறை கும்பல். அறிவைத் தீட்டும் பள்ளிக்குள், தீட்டிய ஆயுதங்கள் ஏந்தி வந்த அந்த கும்பல் நடத்திய வெறியாட்டத்தினால் ஒட்டுமொத்த பள்ளியே வெறும் கூடாக காட்சியளிக்கிறது. மாணவர்களின் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் தீயிலிட்டு கொளுத்தப்பட்டிருப்பதால், அவர்களது எதிர்கால வாழ்வே தற்போது கேள்விகுறியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com