நேரடிப் போட்டியில் உள்ள இரண்டு உடற்பயிற்சி உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டது தொடர்பாக விளக்கமளிக்குமாறு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி, இந்திய அணிக்காக சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வருகிறார். மேலும், நாட்டின் முன்னணி நிறுவனங்கள் பலவற்றின் விளம்பர தூதராகவும் அவர் இருந்து வருகிறார். விளம்பரங்களில் இந்து கடவுள் மகாவிஷ்ணு போல் தோன்றியதாக தோனி மீது தொடர்ப்பட்ட வழக்கு, சமீபத்தில் தான் முடித்து வைக்கப்பட்டது. இந்தநிலையில், விளம்பரம் தொடர்பான மற்றொரு வழக்கில் தோனி சிக்கியுள்ளார்.
உடற்பயிற்சி உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஸ்போர்ட்ஸ் பிட் வேர்ல்டு பிரைவேட் லிமிடெட் (SWPL) என்ற நிறுவனத்தின் விளம்பர தூதுவராக தோனி இருந்து வருகிறார். இந்தநிலையில், எஸ்டபிள்யூபிஎல் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஃபிட்7 (Fit7) நிறுவனத்தின் விளம்பர தூதுவராக அவர் நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஃபிட் 7 நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதன் மூலமாக, எஸ்டபிள்யூபிஎல் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை தோனி மீறிவிட்டதாகக் கூறி விகாஸ் அரோரா என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மேலும், ஒப்பந்தத்தை மீறிய தோனி மீது எஸ்டபிள்யூபிஎல் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர், தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு தோனி மற்றும் எஸ்டபிள்யூபிஎல் நிறுவனம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 13க்கு ஒத்திவைத்தது. எஸ்டபிள்யூ நிறுவனத்தில் விகாஸ் அரோராவுக்கு 33 சதவீத பங்குகள் இருக்கிறது.