தேர்வு செய்யாததால் ஆத்திரம்: டெல்லி கிரிக்கெட் பயிற்சியாளர் மீது சரமாரி தாக்குதல்!

தேர்வு செய்யாததால் ஆத்திரம்: டெல்லி கிரிக்கெட் பயிற்சியாளர் மீது சரமாரி தாக்குதல்!
தேர்வு செய்யாததால் ஆத்திரம்: டெல்லி கிரிக்கெட் பயிற்சியாளர் மீது சரமாரி தாக்குதல்!

அணிக்கு தேர்வு செய்யாததால் ஆத்திரமடைந்த கிரிக்கெட் வீரர், தனது ஆதரவாளர்களுடன் டெல்லி அணியின் தேர்வுக் குழுத் தலைவ ரைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லி கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக இருப்பவர் அமித் பண்டாரி. இவர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர். சையத் முஸ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் விரைவில் நடக்க இருக்கிறது. இதற்காக 23 வயதுக்குட்பட்ட டெல்லி அணி வீரர்கள் தேர்வுக்கு 33 பேர் வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு டெல்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி வளாகத்தில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.. அதை அமித் பண்டாரி மற்றும் டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பார்த்து கொண்டிருந்தனர். 

அப்போது திடீரென மைதானத்துக்குள் அடையாளம் தெரியாத 8 பேர் கொண்ட கும்பல் புகுந்து, அமித் பண்டாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. பின் அவரை ஹாக்கி ஸ்டிக், இரும்புக் கம்பி, கிரிக்கெட் மட்டை ஆகியவற்றால் சரமாரியாகத் தாக்கியது. அருகில் இருந்தவர்கள், ஓடி வந்து அவர்களை தடுத்தனர். ஆனால், அந்தக் கும்பல், துப்பாக்கியை காட்டி மிரட்டிவிட்டு தாக்குதலைத் தொடர்ந்தது.

இதில் நிலைதடுமாறிய பண்டாரி சரிந்து விழுந்தார். பின்னர் அந்தக் கும்பல் தப்பி ஓடியது. பலத்த காயம் அடைந்த பண்டாரியை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தலையில் நான்கு தையல் போடப்பட்டது. அவர் குணமாகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி ஒருவரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். 

23 வயதுக்கு உட்பட்ட அணி தேர்வில், அனுஜ் தேடா என்பவர் தேர்வு செய்யப்படவில்லை. இதன் காரணமாக ஆத்திரத்தில், அவர் ஏற்பாட்டில் அந்த கும்பல் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பது தெரிய வந்தது. 

இந்த தாக்குதல் பற்றி அமித் பண்டாரி கூறும்போது, ‘’எனது விளக்கத்தை போலீசாரிடம் தெரிவித்துவிட்டேன். இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் காரணத்தையும் தாக்கியவர்கள் பற்றியும் கூறிவிட்டேன்’’ என்றார்.

இந்த சம்பவம் டெல்லி கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com