அதிரடி காட்டிய டெல்லி: போராடி தோற்ற கொல்கத்தா அணி
கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து வெற்றியை எட்டும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக பிரித்வி ஷாவும், ஷிகார் தவானும் களம் இறங்கினர். ஆரம்பத்திலேயே சரவெடியாக வெடித்தனர். இதையடுத்து 16 பந்துகளுக்கு 26 ரன்கள் எடுத்து தவான் ஆட்டமிழக்க அதையடுத்து களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியில் கூட்டணி சேர்ந்தார்.
பிரித்வி ஷா 41 அந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸ் அடித்து 66 ரன்களை குவித்தார். அவரைத்தொடர்ந்து பண்ட் 17 பந்துகளில் 38 ரன்களை எடுத்தார். ஆட்டத்தின் இறுதி வரை களத்தில் நின்று ஸ்ரேயாஸ் ஐயர் பட்டையை கிளப்பினார். 38 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 228 ரன்கள் குவித்தது. கொல்கத்தா பவுலிங்கை பொருத்தவரை வருண் சக்கரவர்த்தி, கமலேஷ் நாகர்கொடி தலா ஒரு விக்கெட்டையும் ரஸல் 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டர்களாக கில்லும் நரைனும் களமிறங்கினர். ஆரம்பமே சொதப்பும் விதமாக நரைன், நார்ட்ஜ் ஓவரில் அவுட்டானார். இதையடுத்து கில் 28 ரன்னுடனும் ரஸல் 13 ரன்களுடனும் பெவிலியன் திரும்பினர். ரானா மட்டும் சற்று நிதானமாக ஆடி 35 பந்துகளில் 58 ரன்களை குவித்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் வெறும் 6 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். தொடர்ந்து விக்கெட்டுகள் சரசரவென சரிந்தன.
ஆனால் மோர்கனின் அதிரடி ஆட்டம் சிறிது நம்பிக்கையை கொடுத்தாலும் நிலைக்கவில்லை. 18 பந்துகளில் 44 ரன்கள் அடித்து வெளியேறினார். இறுதியில் திரிப்பாதி மட்டுமே நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வந்த நிலையில் ஸ்டொய்னிஸ் பந்தில் போல்டாகி வெளியேறினார். 16 பந்துகளில் 36 ரன்கள் விளாசியிருந்தார். 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி அணியின் பவுலிங்கை பொருத்தவரை நார்ட்ஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஹர்சல் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் ஸ்டொய்னிஸ், மிஸ்ரா, ரபடா ஆகியோர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.