டெல்லி போராட்டம் வீண்: ராஜஸ்தான் 'த்ரில்' வெற்றி-கடைசி ஓவரில் நடந்த வாக்குவாதம், பரபரப்பு

டெல்லி போராட்டம் வீண்: ராஜஸ்தான் 'த்ரில்' வெற்றி-கடைசி ஓவரில் நடந்த வாக்குவாதம், பரபரப்பு
டெல்லி போராட்டம் வீண்: ராஜஸ்தான் 'த்ரில்' வெற்றி-கடைசி ஓவரில் நடந்த வாக்குவாதம், பரபரப்பு

ஜோஸ் பட்லரின் பட்டாசு ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி நிர்ணயித்த பிரமாண்ட ஸ்கோரை டெல்லி அணி விடாப்பிடியுடன் துரத்தி இறுதியில் தோல்வி கண்டது.

ஐபிஎல் தொடரில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இத்தொடரில் தொடக்கத்திலிருந்தே வேற லெவல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜோஸ் பட்லர் இம்முறையும் ஜோரான ஆட்டத்தை தொடர்ந்தார். பட்லர் ஒரு முனையிலும் இளம்புயல் தேவ்தத் படிக்கல் மறுமுனையிலுமாக விளாசித் தள்ள ஸ்கோர் படுவேகமாக உயர்ந்தது.

படிக்கல் 54 ரன்னில் வெளியேறினாலும் பட்லர் எதிராளிகளின் பந்துகளை சிக்சர், பவுண்டரி என பறக்கவிட்டு மின்னல் வேகத்தில் ஸ்கோரை உயர்த்தினார். 36 பந்தில் அரை சதம் தொட்ட பட்லர் 56 பந்தில் சதத்தையும் பூர்த்தி செய்தார். இத்தொடரில் பட்லர் அடிக்கும் 3ஆவது சதம் இது. பட்லர் 65 பந்துகளில் தலா 9 பவுண்டரி மற்றும் 9 சிக்சர்களுடன் 116 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 222 ரன் குவித்தது. இத்தொடரில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது. கேப்டன் சஞ்சு சாம்சன் 46 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

அடுத்து 223 ரன் என்ற இமாலய இலக்கை நோக்கி டெல்லி அணி ஆட்டத்தை தொடங்கியது. ராஜஸ்தானுக்கு தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்லர் என நிரூபிக்கும் வகையில் பிருத்வி ஷா 37, வார்னர் 28, பந்த் 44, லலித் யாதவ் 37 என டெல்லி வீரர்கள் விடாப்பிடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி 2 ஓவரில் 36 ரன் தேவை என்ற நிலையில் டெல்லிக்கு வெற்றிக்கான வெளிச்சம் தூரத்தில் தெரிந்தது. ஆனால் 19ஆவது ஓவரை பிரசித் கிருஷ்ணா அற்புதமாக வீசி விக்கெட் மெய்டன் ஆக்கினார். இதனால் கடைசி ஓவரில் டெல்லி வெற்றிக்கு 36 ரன் தேவைப்பட்டது.

அப்போது களத்தில் இருந்த பவல் முதல் 3 பந்துகளையும் சிக்சருக்கு பறக்க விட்டு எதிராளிகளுக்கு ஆயிரம் வோல்ட் அதிர்ச்சியை பாய்ச்சினார். ஆனால் அப்பந்து உயரமாக வந்ததால் நோ பால் கேட்டு டெல்லி வீரர்கள் வாக்குவாதம் செய்தனர். களத்திலிருந்த வீரர்களை வெளியேறுமாறு கேப்டன் பந்த் அழைத்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அவ்வாதங்களை அம்பயர் நிராகரித்துவிட்டார். ஆனால் இதன் பின் 3 பந்துகளில் தேவையான ரன்களை டெல்லி அணியால் எடுக்கமுடியவில்லை. இறுதியில் 15 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

இதையும் படிக்கலாம்: தோனியின் சாதனையில் மற்றொரு 'மைல்கல்' - என்ன அது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com