டெல்லி அணியின் "துரோணர்" ரிக்கி பாண்டிங்... அவர் சாதித்தது என்ன?
ஐபிஎல் தொடரில் 2012 ஆம் ஆண்டுக்குப் பின் பிளே ஆஃப் வரை கூட முன்னேறாமல் இருந்த டெல்லி அணி, கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை செல்ல உரமிட்டார் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங். அவரது ஐபிஎல் பயணத்தை திரும்பிப் பார்க்கலாம்.
சர்வதேச கிரிக்கெட்டில் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவர், 2000 ஆண்டு காலகட்டங்களின் சிறந்த கேப்டன், ஆஸ்திரேலிய தேசிய அணிக்கு ஹாட்ரிக் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர் தான் ரிக்கி பாண்டிங். ஐபிஎல்லில் 2008 ஆம் ஆண்டு கொல்கத்தாவுக்கும் மற்றும் 2013 ஆம் ஆண்டு மும்பை அணியிலும் விளையாடினார் பாண்டிங். பின்னர் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற பிறகு, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மும்பை அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் பாண்டிங்.
இவரது பயிற்சியின் கீழ் 2015 ஆம் ஆண்டு சாம்பியனாக மகுடம் சூடியது மும்பை இந்தியன்ஸ். 2016 ஆம் ஆண்டு லீக் சுற்றுடன் மும்பை வெளியேற பயிற்சியாளரை மாற்றியது மும்பை இந்தியன்ஸ். இதையடுத்து 2018 ஆம் ஆண்டு, முதல் முறையாக டெல்லி அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் பாண்டிங். பதவியேற்ற முதல் சீசனில் பாண்டிங் பயிற்சியின் கீழ் டெல்லி பிளே ஆஃப்க்கு முன்னேறவில்லை. அணியில் சில மாறுதல்களைக் கேட்டுப் பெற்ற பாண்டிங், தனது சர்வதேச அனுபவங்களின் மூலம் 2019 ஆம் ஆண்டு டெல்லி அணியை QUALIFIER 2 வரை முன்னேற்றினார். வீரர்கள் உடனான அவரது பயிற்சி நேர்த்தி, ஈடுபாடு உள்ளிட்டவை ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டன.
பாண்டிங் மீதான எதிர்பார்ப்புகள் 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் உச்சம் பெற்றிருந்தது. எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றமளிக்காத வகையில் மிரட்டலான வெற்றிகளுடன் இறுதி வரை முன்னேறியது டெல்லி. பல நுட்பங்களை வீரர்களிடையே புகுத்திய பாண்டிங்கிற்கு, டெல்லியை முதல் முறையாக சாம்பியனாக வாகை சூட வைக்கும் வாய்ப்பு நூழிலையில் தவறியது.
கடந்த சீசனில் இரண்டாவது இடத்தை பிடித்த டெல்லி, நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. ஸ்ரேயஸ் அய்யர் கடந்த முறை தவற விட்ட ஐபிஎல் கோப்பையை நடப்பு சீசனில் இளம் கேப்டன் ரிஷப் பந்த் கைப்பற்றி, பாண்டிங்கின் மகுடத்தில் மற்றொரு மாணிக்கத்தை சேர்ப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.