ஆல்-ரவுண்டராக அசத்திய ஸ்டாய்னிஸ்… டெல்லி கலக்கல் வெற்றி...

ஆல்-ரவுண்டராக அசத்திய ஸ்டாய்னிஸ்… டெல்லி கலக்கல் வெற்றி...
ஆல்-ரவுண்டராக அசத்திய ஸ்டாய்னிஸ்… டெல்லி கலக்கல் வெற்றி...

அபுதாபியில் நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடின.

வெற்றி பெற்றால் இறுதி போட்டிக்கு முன்னேறலாம் என்ற நம்பிக்கையில் இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் விளையாடின.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்தது.
தவானும் - ஸ்டாய்னிஸும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர்.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே டெல்லி அதிரடி காட்ட பவர் பிளே ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்களை குவித்தது.
தவான் மற்றும் ஸ்டாய்னிஸ் இணையர் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
முதல் விக்கெட்டிற்கு இருவரும் 86 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

பரிசோதனை முயற்சியாக ஓப்பனிங்கில் இறங்கிய ஸ்டாய்னிஸ் 27 பந்துகளில் 38 ரன்களை குவித்து ரஷீத் கானின் அற்புதமான சுழலில் க்ளீன் போல்டானார்.
தொடர்ந்து டெல்லியின் கேப்டன் ஷ்ரேயஸ் களம் இறங்கினார்.
10 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 102 ரன்களை எடுத்தது டெல்லி.
ஷ்ரேயஸ் 21 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க ஹெட்மயர் கிரீஸுக்கு வந்தார்.
தன் பங்கிற்கு 22 பந்துகளில் 42 ரன்களை அதிரடியாக குவித்தார் அவர்.


மறுமுனையில் டெல்லிக்காக ஆங்கரிங் இன்னிங்ஸ் விளையாடிய தவான் 50 பந்துகளில் 78 ரன்களை எடுத்தார். அதில் 6 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும்.
மீண்டும் இந்த சீசனில் சதம் விளாசுவார் தவான் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சந்தீப் ஷர்மாவின் பந்துவீச்சில் LBW முறையில் விக்கெட்டை இழந்தார்.

இருபது ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை குவித்தது டெல்லி.
200 ரன்களுக்கு மேல் டெல்லி அணி எடுப்பது உறுதியாகி இருந்த நிலையில் அதை கடைசி பத்து ஓவர்களில் கூட்டு சேர்ந்து கட்டுப்படுத்தினர் ஹைதராபாத் பவுலர்கள்.
அதிலும் ஹைதராபாத் அணிக்காக கடைசி ஓவரை வீசிய தமிழக வீரர் நடராஜன் ஆறு பந்துகளையும் ஃபுல் லென்த் யார்க்கர் டெலிவரிகளாக வீசி மாஸ் காட்டினார். அந்த ஓவரில் வெறும் 7 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார் அவர்.


தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணிக்கு வார்னரும், கார்கும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர்.
அஷ்வின் வீசிய முதல் ஓவரில் 12 ரன்களை விளாசினர்.
ரபாடா வீசிய இரண்டாவது ஓவரில் வார்னர் துரதிஷ்டவசமாக போல்டாகி வெளியேறினார். லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்து வார்னரின் பேடில் பட்டு ஸ்டெம்ப் தகர்ந்தது.
அதனால் மணீஷ் பாண்டே களத்துக்குள் வந்தார்.
டெல்லி அணியின் ஸ்டாய்னிஸ் வீசிய ஐந்தாவது ஓவரில் கார்கும், பாண்டேவும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினார்.
பவர் பிளே முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 49 ரன்களை குவித்தது ஹைதராபாத்.


கடந்த போட்டியை போலவே வில்லியம்சன்னும், ஹோல்டரும் பலமான பார்ட்னர்ஷிப் அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹோல்டர் லூஸ் ஷாட் ஆடி அக்சர் பட்டேலின் பந்து வீச்சில் வீழ்ந்தார்.
பின்னர் களம் இறங்கிய சமாதுடன் கூட்டு சேர்ந்து வில்லியம்சன் கிளாஸான இன்னிங்ஸ் விளையாடினர்.
இருவரும் 57 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவர்களது ஆட்டம் டெல்லிக்கு கொஞ்சம் கிலி ஏற்படுத்தியது.


வில்லியம்சன் 45 பந்துகளில் 67 ரன்களை குவித்து ஸ்டாய்னிஸ் பந்தில் வெளியேறினார். அவரது இன்னிங்ஸில் 5 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும்.

ரபாடா வீசிய 19வது ஓவரில் தொடர்ந்து மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டை இழந்தது ஹைதராபாத்.
சமத்தாக விளையாடிய இளம் வீரர் அப்துல் சமாத் 16 பந்துகளில் 33 ரன்களை குவித்து அசத்தினார்.
20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்து வீழ்ந்தது ஹைதராபாத்.
ஃபீல்டிங்கில் மோசகமாக செயல்பட்டதும் ஹைதராபாத்தின் வீழ்ச்சிக்கு மிகமுக்கிய காரணம்.
டெல்லிக்காக ரபாடா 4 விக்கெட்டுகளையும், ஸ்டாய்னிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.


பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என ஆல் ரவுண்ட் பர்பாமென்ஸ் கொடுத்திருந்தார் ஸ்டாய்னிஸ்.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் மும்பை உடன் விளையாட உள்ளது டெல்லி.
13 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணி முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் வரலாற்றின் முதல் சீசனில் சென்னையும், ராஜஸ்தானுக்கு இறுதி போட்டியில் விளையாடின. தொடர்ந்து 2009 சீசனில் ஹைதராபாத், பெங்களூரு அணியும் விளையாடின. 2010 சீசனில் மும்பை, 2012 சீசனில் கொல்கத்தா, 2014 சீசனில் பஞ்சாப் மற்றும் 2020 சீசனில் டெல்லியும் முதன்முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் விளையாடும் 8 அணிகளும் இறுதி போட்டியில் விளையாடியுள்ளன என்ற அந்தஸ்த்தை எட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com