இந்திய கால்பந்து அணியில் இடம் பிடித்த பியூன் மகன் - தடைகளை தாண்டி சாதித்த ரொனால்டோ ரசிகர்
உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி பியூன் மகன் நிஷு குமார் இந்திய கால்பாந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளார். முஸாபர்நகரின் போபா பகுதியைச் சேர்ந்த நிஷு, ‘ரொனால்டோ பாய்’என்று அவரது பகுதியினரால் அழைக்கப்படுகிறார். அந்த அளவிற்கு ரொனால்டோவின் ரசிகர் அவர். பள்ளிகள் தொடங்கி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று வீட்டில் கோப்பைகளாக குவித்து வைத்திருந்தார்.
உள்ளூர் அளவில் நிறைய போட்டிகளில் விளையாடி வந்த அவர், பெங்களூரு கால்பாந்து அணிக்காக விளையாடி வந்தார். சமீபத்தில் அந்த அணியுடன் ரூ.1 கோடிக்கு ஒப்பந்தம் போட்டிருந்தார். பெங்களூரு கால்பந்து கிளப்பில் சேர்ந்த முதல் ஆண்டு ரூ.40 லட்சம், இரண்டாம் ஆண்டு ரூ45 லட்சம் ஒப்பந்தம் போட்டிருந்தார். ஐஎஸ்எல் கால்பந்தாட்ட தொடரில் தொடர்ச்சியாக முத்திரை பதித்து வந்தார்.
இந்திய அணியின் தேர்வான நிஷு குமார் கூறுகையில், “நான் 5 வயதாக இருந்த போது, கால்பந்து விளையாட தொடங்கினேன். எங்களுடைய பள்ளி மைதானத்தில் விளையாட்டு ஆசிரியரின் வழிகாட்டுதலில் கால்பந்து விளையாடினோம். எங்களுக்கு, கால்பந்து என்பது எங்களால் விளையாட முடிந்த மிகவும் செலவு குறைவான விளையாட்டு. கால்பந்து விளையாட பந்து மட்டும் இருந்தால் போதும்” என்றார்.
தமக்கு நேர்ந்த அனைத்து தடைகளையும், வறுமையையும் தாண்டி 21 வயதான நிஷு குமார் இந்திய அணியில் இடம்பெற்றிருப்பது அவரது குடும்பத்திற்கு அளவற்ற மகிழ்ச்சியை தந்துள்ளது.