
நடப்பு ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டிகள் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அதன்படி முதல் அரையிறுதிப்போட்டியில் நடப்பாண்டு விம்பிள்டன் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த ஜாம்பவான் வீரர் நோவக் ஜோகோவிச் அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸை நேர் செட் கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு சென்றுள்ளர். அவரை மற்றொரு அமெரிக்காவின் 20 வயது இளைஞரான பென் ஷெல்டன் அரையிறுதியில் எதிர்கொள்ளவிருக்கிறார்.
இரண்டாவது அரையிறுதிப்போட்டிக்கு மூன்றாம் நிலை வீரரான டேனியல் மெட்வெடேவ் முதல் வீரராக முன்னேறிய நிலையில், அவரை யார் எதிர்கொள்ளப்போகிறார்கள் என்ற மற்றொரு காலியிறுதிப்போட்டியில் விம்பிள்டன் சாம்பியனான அல்கரஸ், 12ஆம் நிலை வீரரான ஸ்வெரெவை எதிர்கொண்டு விளையாடினார்.
ஆர்தர் ஆஷே ஸ்டேடியத்தில் புதன்கிழமை நடைபெற்ற கடைசி காலியிறுதிப்போட்டியில் அல்கரஸ் மற்றும் ஸ்வெரவ் இருவரும் பலப்பரீட்சை நடத்தினர். தொடக்கம் முதலே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்கரஸ் தன்னுடைய மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தி காட்டினார். டிஃபன்ஸ், அட்டாக்கிங் என இரண்டிலும் கலக்கிய அவர் ரஷ்ய வீரரான ஸ்வெரவை எழவே விடாமல் 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
அல்கரஸ் அரையிறுதிக்கு முன்னேறியதை அடுத்து டென்னிஸ் தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் அல்கரஸ்-1, ஜோகோவிச்-2, டேனியல் மெட்வடேவ்-3 என மூன்று ஸ்டார் வீரர்களும் கோப்பைக்காக மோத உள்ளது எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஒருவேளை ஜோகோவிச் முதல் அரையிறுதியிலும், அல்கரஸ் இரண்டாவது அரையிறுதியிலும் வென்றால் நடப்பு விம்பிள்டன் தொடரில் தோல்வியுற்றதற்கு அல்கரஸை பழிவாங்கும் வாய்ப்பு ஜோகோவிச்சுக்கு கிடைக்கும். இல்லை மீண்டும் ஜோகோவிச்சை இறுதிப்போட்டியில் வீழ்த்தி மற்றொரு பட்டத்தை தட்டிச்செல்லவும் அல்கரஸ்க்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையில் டேனியல் என்ன செய்யப்போகிறார் என்ற எண்ணமும் அதிகமாக உள்ளது. வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி இரண்டு அரையிறுதிப்போட்டிகளும் நடைபெறவுள்ளன. கடந்த 2022 அமெரிக்கன் ஓபன் பட்டத்தை வென்று அல்கரஸ் நடப்பு சாம்பியனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.