"விரைவில் என்னை களத்தில் சந்திப்பீர்கள்" தீபக் சாஹர் நம்பிக்கை
கொரோனா வைரஸால் பாதிக்கபட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சாளர் தீபக் சாஹர் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக யுஏஇ (ஐக்கிய அரபு அமீரகம்) சென்றிருக்கிறது. கடந்த வாரம் அணியினர் அனைவருக்கும் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் 13 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரும் ஒருவர். இந்தத் தகவல் வெளியானது முதலே அவர் மீண்டும் அணியில் இடம்பிடிப்பாரா ? என்ற கேள்விகள் எழும்பின. அத்துடன் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு வரவேண்டும் என ரசிகர்கள் பிரார்த்திக்க தொடங்கினர். பலரும் தீபக் சாஹருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இந்நிலையில், ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள தீபக் சாஹர், “உங்கள் அனைவரது அன்பு மற்றும் பிரார்த்தனைகளுக்கு வாழ்த்துக்கள். நான் இப்போது நன்றாக உள்ளேன். உடற்தகுதியுடன் இருப்பதற்கு என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன். விரைவில் என்னை நீங்கள் களத்தில் சந்திப்பீர்கள் என நம்புகிறேன். உங்கள் அன்பை தொடர்ந்து அளியுங்கள். களத்தில் உங்களின் ஒருநாளை கூட தவறவிடமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் உடற்பயிற்சி செய்வதை அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.