சதம் விளாசி டி காக் ருத்ர தாண்டவம்! 210 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்த லக்னோ!

சதம் விளாசி டி காக் ருத்ர தாண்டவம்! 210 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்த லக்னோ!
சதம் விளாசி டி காக் ருத்ர தாண்டவம்! 210 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்த லக்னோ!

கொல்கத்தா அணிக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடிய குயிண்டன் டி காக்கால், 210 ரன்களை குவித்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நவி மும்பையின் டிஒய் பாட்டில் மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் ஓப்பனர்களாக குயிண்டன் டிகாக்கும் கே.எல்.ராகுலும் களமிறங்கினர்.

உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரில் பவுண்டரி விளாசி தித்திப்பாக ஆட்டத்தை துவக்கினார் டி காக். டிம் சவுத்தி வீசிய ஓவரிலும் பவுண்டரிகளாக டி காக் விளாச, உமேஷ் வீசிய 3வது ஓவரில் கொடுத்த அருமையான கேட்ச் வாய்ப்பை அபிஜித் மிஸ் செய்தார். இந்த தவறுக்கு தாங்கள் எவ்வளவு பெரிய விலையை கொடுக்க போகிறோம் என்பதை கொல்கத்தா வீரர்கள் உணர்ந்திருக்க மாட்டார்கள்.

நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த ராகுலும் உமேஷ் வீசிய 5வது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாச ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது. மறுபக்கம் டிகாக் ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக் கோட்டுக்கு விரட்டி ரன் ரேட் சரியாமல் பார்த்துகொண்டார். டிம் சவுத்தி வீசிய ஓவர்களில் தொடர்ந்து 2 சிக்ஸர்களை ராகுல் விளாச, 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் கூட இழக்காமல் 83 ரன்களை குவித்தது லக்னோ அணி.

அதன் பின் மீண்டும் அதிரடிப் பாதைக்கு டிகாக் திரும்ப, 36 பந்துகளில் அரைசதம் கடந்து விளையாடினார். அதன்பின் ராகுலும் 41 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன்பின்னர் தான் டிகாக் தனது ருத்ர தாண்டவத்தை துவங்கினார். சுனில் நரைன் ஓவரில் சிக்ஸர் விளாசிய டிகாக், வருண் வீசிய ஓவரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரிகளை விளாசி வான வேடிக்கை காட்டினார். டிம் சவுத்தி ஓவரில் பவுண்டரி விளாசிய டி காக், ரஸல் வீசிய ஓவர்களில் பவுண்டரி விளாசிய படி 59 பந்துகளில் சதத்தை கடந்தார்.

36 பந்துகளில் முதல் 50 ரன்களை எடுத்த டிகாக், அடுத்த 23 பந்துகளில் மேலும் 50 ரன்களை எடுத்து சதம் கடந்தார். சதத்தை கடந்தபின்னும் டிகாக் அதிரடியை தொடர கொல்கத்தா அணி பரிதாப நிலைக்கு ஆளானது. டிம் சவுத்தி வீசிய 19வது ஓவரில் முதல் பந்தில் ராகுல் சிக்ஸர் விளாசி அடுத்து ஒரு ரன் எடுத்தார். அடுத்த 3 பந்துகளில் டிகாக் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாச 200 ரன்களை நோக்கி ஸ்கோர் நகர்ந்தது.

ரஸல் வீசிய கடைசி ஓவரில் டிகாக் 4 பவுண்டரிகளை விளாச, 20 ஓவர்கள் முடிவில் 210 ரன்களை விக்கெட் இழப்பின்றி எட்டியது லக்னோ அணி. டிகாக் 70 பந்துகளைச் சந்தித்து 140 ரன்களை குவித்து மலைக்க வைத்தார். இதில் 10 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களும் அடக்கம். இதன்மூலம் ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தார் டிகாக்.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்:

175* கிறிஸ்கெய்ல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
158* மெக்கல்லம் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
140* டி காக் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்)
133* ஏபிடிவில்லியர்ஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
132* கே.எல்.ராகுல் (பஞ்சாப் கிங்ஸ்)

மேலும் கேப்டன் கே.எல்.ராகுல் தன்பங்குக்கு 51 ரன்களை சந்தித்து 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை விளாசி 68 ரன்கள் எடுத்தார். ஒரு விக்கெட் கூட இழக்காமல் லக்னோ அணி 210 ரன்களை எடுத்ததே, ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஓப்பனிங் ஸ்கோர் ஆகும். ஒட்டுமொத்தமாக இந்த டிகாக்-ராகுல் பார்ட்னர்ஷிப் ஐபிஎல் வரலாற்றில் 3வது மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் ஆகும்.

ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்கள்:

229 கோலி - டி வில்லியர்ஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
215* கோலி - டி வில்லியர்ஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
210* ராகுல் - டி காக் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) [ஓப்பனிங்]

3வது ஓவரில் டிகாக் கொடுத்த கேட்ச் வாய்ப்பை அபிஜித் அப்போழுதே சரியாக பிடித்திருந்தால் லக்னோவின் நிலை வேறு மாதிரி இருந்திருக்கக்கூடும். இதுமட்டுமல்ல, சுனில் நரைன் வீசிய 15வது ஓவரில் கீப்பருக்கு கொடுத்த அருமையான கேட்ச் வாய்ப்பை மிஸ் செய்தார். அதையாவது சாம் பில்லிங்ஸ் சரியாக வ் பிடித்திருக்கலாம். அப்போழுது 69 ரன்களை தான் டிகாக் கடந்திருந்தார். இதன்பின் வந்த 5 ஓவர்களில் தான் டிகாக் வெளுத்து வாங்கி 71 ரன்களை குவித்தார். எனவே இந்த இமாலய ஸ்கோர் 2 பேட்டர்களால் மட்டுமல்ல., 2 கேட்ச் டிராப்களாலும் தான் எடுக்கப்பட்டது.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. ஒரு விக்கெட் கூட இழக்காமல் லக்னோ அணி விளையாடிய நிலையில், முதல் ஓவரில் வெங்கடேஷ் அய்யர் விக்கெட்டை பறிகொடுத்தது கொல்கத்தா அணி. அடுத்த ஓவரில் அபிஜித் தோமரும் அவுட்டான நிலையில் 3 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் நிதிஷ் ரானா அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்தனர். ரானா சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்தார். இதானால், 6 ஓவர்கள் முடிவில் அந்த அணி 60 ரன்கள் எட்டியது. இதில் ரானா 18 பந்துகளில் 39 எடுத்திருந்தார். 

42 ரன்கள் எடுத்த நிலையில் நிதிஷ் ரானா பெவிலியன் திரும்பினார். அவரது அதிரடியை ஸ்ரேயாஸ் ஐயரும், பில்லிங்ஸும் கையில் எடுத்தனர். ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸர் பவுண்டரிகளை விளாசினர். 11 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பு நெருங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக ரஸல் இன்னும் களமிறங்க தயாராக இருக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com