ஹைதராபாத் பந்துவீச்சை துவம்சம் செய்த ஸ்டாய்னிஸ் - தவான் ஜோடி!
அபுதாபியில் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
டெல்லியின் ஓப்பனிங் இந்த சீசனில் சொதப்பி வரும் நிலையில் தவானும், ஸ்டாய்னிஸும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர்.
தவான் மற்றும் ஸ்டாய்னிஸ் இணையர் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை பொளந்து கட்டினர். சந்தீப் சர்மா வீசிய முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இரண்டாவது ஓவர் முதல் தங்களது ரன் வேட்டையை இந்த ஜோடி தொடங்கியது. பவுண்டரிகளாக பறந்தது. ஸ்டாய்னிஸ் முதலில் அதிரடி காட்ட, பின்னர் பொறுமையாக விளையாடிய தவானும் ஹைதராபாத் பந்துவீச்சை துவம்சம் செய்தார். ஹோல்டரின் ஒரே ஓவரில் 18 ரன்களை எடுத்தார் ஸ்டாய்னிஸ்.
பரிசோதனை முயற்சியாக அவருக்கு ஓப்பனிங் வாய்ப்பை அந்த அணியின் பயிற்சியாளர் பாண்டிங் கொடுக்க 6 ஓவர்களில் 65 ரன்களை டெல்லி ஸ்கோர் உதவினார் ஸ்டாய்னிஸ். டெல்லி அணி பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக பவர் பிளே ஓவர்களில் சொதப்பி வந்தனர். முதல் விக்கெட் எளிதில் வீழ்ந்துவிடும். ஆனால், இந்தப் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்தது. ஸ்டாய்னிஸ் 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ரஷித் சுழலில் ஆட்டமிழந்தார்.
9 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்து டெல்லி அணி விளையாடி வருகிறது. ஷிகர் தவான் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.