வார்னர் அதிரடி: ஆப்கானை எளிதாக வீழ்த்தியது ஆஸி!
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை, ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் நடந்து வருகிறது. கடந்த 30 ஆம் தேதி நடந்த முதல் போட்டியில், இங்கிலாந்து-தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அடுத்து நடந்த போட்டியில், வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்று இரண்டு போட்டிகள் நடந்தன. ஒரு போட்டியில் இலங்கை-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. பிரிஸ்டோல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கான் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்கள் முகமது ஷாஷாத் மற்றும் ஹர்ரத்துல்லா ஜஜாய் ஆகியோர் டக் அவுட் ஆகினர். பின்னர் வந்த ரஹ்மத் ஷா மட்டும் நிலைத்து நின்று ஆட, மற்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கடைநிலை ஆட்டக்காரர்கள் நஜிபுல்லா ஜட்ரான், குல்பதின் நைப், ரஸித் கான் ஆகியோர் சிறிது நேரம் பொறுப்புடன் ஆடிய தை அடுத்து அந்த அணி, 200 ரன்களை கடந்தது. முடிவில் ஆப்கான் அணி 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக நஜிபுல்லா ஜட்ரான் 2 சிக்ஸர்கள் உள்பட 51 ரன்கள் அடித்தார். ஆஸ் திரேலியா அணி தரப்பில் கம்மின்ஸ், ஜாம்பா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் ஆரோன் பின்ச், அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உஸ்மான் கவாஜா 15 ரன்னிலும், ஸ்டீவன் சுமித் 18 ரன்னிலும் வெளியேறினர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய டேவிட் வார்னர், தனது 18-வது அரைசதத்தை நிறைவு செய்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன் சேர்த்து வெற்றி பெற்றது.
ஓராண்டு தடைக்கு பின் முதல் சர்வதேச போட்டியில் ஆடிய வார்னர், 89 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.