அதிரடி வார்னரை மந்தமாக்கிய வங்கதேச பந்துவீச்சாளர்கள்
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தனது மந்தமான சதத்தை பதிவு செய்துள்ளார்.
வங்கதேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் சிட்டகாங்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த வங்காள தேசம் 305 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சில் ஆல்அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர் 88 ரன்னுடனும், ஹேண்ட்ஸ்காம்ப் 69 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
மூன்றாவது நாளான இன்று தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வார்னர் சதம் அடித்தார். அவர் 209 பந்தில் 5 பவுண்டரிகளுடன் இந்த சதத்தை அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 234 பந்தில் 7 பவுண்டரியுடன் 123 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 379 குவித்தது. வங்கதேசம் தரப்பில் முஸ்தபீர் ரஹ்மான், ஹசன் மிர்சா தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். வார்னரின் சதத்தால் ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
அதிரடி ஆட்டக்காரரான வார்னர் குறைவான பந்துகளில் சதம் அடிக்கக் கூடியவர். பெரும்பாலும் 100-30 பந்துகளில் சதம் அடித்துவிடுவார். இதற்கு முன் இந்தியாவிற்கு எதிராக 2014-ல் 154 பந்தில் சதம் அடித்ததே மந்தமான சதமாக இருந்தது. தற்போது, 209 பந்துகளில் சதம் அடித்து தனது மந்தமான சதத்தை பதிவு செய்துள்ளார். 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர், 20 சதம், 24 அரைசதங்கள் விளாசியுள்ளார்.