ஆஸ்திரேலிய வீரரின் ட்விட்டரை ஹேக் செய்து ஈரானுக்கு எதிரான பதிவு - மர்மநபர்கள் கைவரிசை
டேரன் லெஹ்மன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் பயிற்சியாளர் மற்றும் பேட்ஸ்மேன் டேரன் லெஹ்மன். இவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு சில மர்மநபர்களால் திடீரென்று ஹேக் செய்யப்பட்டது. இவரது கணக்கை முடக்கிய ஹேக்கர்கள் ஈரானை குறிவைத்தும், அமெரிக்கா ஈரான் இடையேயான சண்டை குறித்தும் செய்திகளை வெளியிட்டு வருவது தெரிய வந்துள்ளது.
தற்போது நடந்து வரும் அமெரிக்கா - ஈரான் நெருக்கடி குறித்த பல செய்திகளை அவரது ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். தற்போது பிக் பாஷ் லீக் உரிமையாளரான பிரிஸ்பேன் ஹீட்டின் பயிற்சியாளராக இருக்கும் லெஹ்மன், ஆஸ்திரேலியா தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவது குறித்து ஷேன் வார்னின் பதிவை அவரது கணக்கில் கடைசியாக ரீ ட்வீட் செய்திருந்தார். அதன் பின் அவரது கணக்கு முடக்கப்பட்டுவிட்டது.
ஆண்களுக்கான ட்வெண்டி 20 கிரிக்கெட் போட்டியை நடத்தி வரும் பிரிஸ்பேன் ஹீட், வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில், லெஹ்மானின் கணக்கு உண்மையில் ஹேக் செய்யப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டது. “ஹாய் ஹீட் ரசிகர்களே, செய்திகளுக்கு நன்றி. எங்கள் பயிற்சியாளர் டேரன் லெஹ்மானின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதை நாங்கள் அறிவோம், மேலும் நிலைமையை சரிசெய்ய ட்விட்டர் நிறுவனத்துடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இந்தத் தவறுக்காக நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம்” எனக் கூறியுள்ளது.