கேப்டனுக்கு சரியான உதாரணம் கோலி: வெட்டோரி புகழாரம்!
ஒரு கேப்டனுக்கான சரியான உதாரணம் விராத் கோலிதான் என்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி சொன்னார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான இவர், மேலும் கூறியதாவது:
விராத் கோலியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் பார்த்தே வந்திருக்கிறேன். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு நான் கேப்டனாக இருந்த போது, அணியில் விராத் கோலியும் இருந்தார். அப்போது இளம் விராத், அணியில் இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். ஆனால் இன்று, தன்னைத்தானே வளர்த்து சிறந்த பேட்ஸ்மேனாக உருவாகி இருக்கிறார். இந்திய கிரிக்கெட்டின் எடுத்துக்காட்டாக அவர் இருக்கிறார். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் அவரைப் போல உருவாக முயற்சிக்கிறார்கள். அது இந்திய அணியை முன்னேற்றத்துக்கு அழைத்துச் செல்கிறது. விராத்துடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தால், கிரிக்கெட் பற்றிதான் அதிகம் சொல்லிக்கொண்டிருப்பார். அதன் மூலம் கிரிக்கெட்டை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பது தெரியும். அதோடு அதை இன்னும் கற்றுக்கொள்ள விரும்புவராகவும் இருக்கிறார். உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்க விரும்புகிறார். அதற்கான திறமையை பெற்றிருக்கிறார். அந்த தீவிரத்துடனேயே இருக்கிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிவர், கிறிஸ் கெய்ல். கடந்த காலங்களில் அவர் பங்களிப்பை மறந்துவிட முடியாது. பெங்களூர் அணியில் அவர் இல்லாதது பற்றி கேட்கிறார்கள். அவர் சிறந்த வீரர். அவருக்கு எளிதாகக் குட்பை சொல்லிவிடமுடியாதுதான். ஆனால், இது எங்களுக்குச் சரியான நேரம். அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு வெட்டோரி தெரிவித்தார்.